துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

துரை இயக்கத்தில் உருவாகிறது ‘இருட்டு’. சுந்தர் சி. நாயகனாக நடித்துள்ளார். பேயைவிடக் கொடூரமான ஒரு விஷயம் குறித்து இந்தப் படத்தில் அலசியுள்ளனராம்.

“எனக்கு பேய் பிசாசு மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அப்படிப்பட்ட என்னையே இப்படியொரு படத்தை இயக்க வைத்திருக்கிறது காலம்.

“சிம்புவுக்காக ஒரு கதையைத் தயார் செய்திருந்தேன். அதைச் சொல்வதற்காக நடிகர் விடிவி கணேஷைச் சந்திக்கச் சென்றேன். கதையைக் கேட்ட அவர், தாமே அதைத் தயாரிப்பதாகச் சொன்னார். 

“இது தொடர்பாக அவரை மீண்டும் சந்திக்கச் சென்றபோதுதான் சுந்தர் சி.யைப் பார்க்க நேர்ந்தது. உடனே அவருக்கும் ஒரு கதையைத் தயார்செய்து சொன்னபோது உடனே படப்பிடிப்பைத் துவங்கலாம் என்று கூறிவிட்டார். 

“பேயை விடக் கொடூரமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது நம் நெஞ்சை உறையச் செய்யும் உண்மையும்கூட. அதை விவரிக்கும் வகையில் கதையை உருவாக்கி உள்ளேன்.

“சுந்தர் சி.யைப் பொறுத்தவரை மிகவும் கண்ணியமானவர். எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுவார். சினிமாவைத் தவிர அவரிடம் வேறு எதையும் பேசியதில்லை. 

“அவர் இயக்கிய படங்களைப் பார்த்துவிட்டு இப்படித்தான் இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால், நேரில் பார்த்தபோது அதிலிருந்து மாறுபட்டு காட்சியளித்தார்.

“சினிமா குறித்து அவரிடம் நிறைய பேசலாம். அண்மைய தொழில்நுட்ப வளர்ச்சி வரை அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். அதுவும் என்னைப் பிரமிக்க வைத்தது,” என்கிறார் இயக்குநர் துரை. 

‘இருட்டு’ படத்தில் தன்ஷிகா, விமலா ராமன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.