நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி யுள்ள ‘சங்கத்தமிழன்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 

இந்தப்படத்தில் விஜய் சேதுபதி-நிவேதா பெத்துராஜின் ஜோடிப்  பொருத்தம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இவரின் கதாபாத்திரம் பேசும்படி  அமைந்துள்ளதாகவும்  கூறப்படுகிறது. 

இதனால்  ‘சங்கத்தமிழன்’ படம் தனக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவதாகக்  கூறியுள்ளார் நிவேதா. 

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி உள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தில் முதல்முறையாக சங்கமித்ரன், தமிழரசன் என்ற இருவேறு கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி  நடித்துள்ளார். 

ராஷி  கன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இரு நாயகிகளும்  விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்துள்ளனர். 

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ‘டிக் டிக் டிக்’, ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, ‘திமிரு புடிச்சவன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இதேபோன்று ராஷி கன்னா ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’, ‘அயோக்யா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என்ற ஆசையுடன்  புதிய படங்களில் நடித்துவரும் இவ்விரு நடிகைகளும்  எந்த அளவில் விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதைக் காண ரசிகர்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டுள்ளது.

முன்னணி நாயகனான பிறகு விஜய் சேதுபதி-சூரி கூட்டணியில்  வெளியாக இருக்கும் 3வது படமான ‘சங்கத்தமிழன்’ இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே திரைக்கு வருகிறது.