கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்

நடிகர் கௌதம் கார்த்திக் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். 

பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

அந்த ஆசிரமத்தில் எடுத்த ஒரு நெகிழ்ச்சியான காணொளியைத்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கௌதம் கார்த்திக் தரையில் உட்கார்ந்து இருக்கிறார். 

அவருக்கு குழந்தைகள் மாறி மாறி வாயில் உணவை ஊட்டிவிடுகிறார்கள். வாய் நிறைய உணவுகளை வாங்கி திக்கித்  திணறிச் சாப்பிடுகிறார் கௌதம். 

இந்தக் காணொளியின் முடிவில்  கௌதம்,  “தாங்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக மற்றவர்களுக்கு சாப்பாடுகளை வழங்க அந்தக் குழந்தைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வளர்த்துள்ள விதத்தைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்,” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

‘வை ராஜா வை’, ‘இவன் தந்திரன்’, ‘மிஸ்டர் சந்திரமவுலி’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கௌதம்.