சுடச் சுடச் செய்திகள்

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

‘பிகில்’ படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்த கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. யோகிபாபு நாயகனுக்கு இணையான வேடத்தில் நடித்துள்ளார்.

டிசம்பர் 6ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதுவும் காற்பந்தாட்டத்தை மையமாக வைத்து  உருவாக்கப்பட்டுள்ள படமாம். எனினும் ‘பிகில்’ படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என்கிறார் இயக்குநர் குமரன்.

வடசென்னையில் வசிக்கும் இளையர்கள் காற்பந்தாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இந்த விளையாட்டில் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என விரும்பும் இந்த இளைஞர்களின்  கனவை அடிப்படையாக வைத்து ‘ஜடா’ உருவாகியுள்ளது.

“தமிழ் இளையர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக காற்பந்து மாறிவருகிறது. தேசிய அணியில் இடம்பெறக்கூடிய அளவிற்குத் திறமை பெற்றிருந்தாலும் கூட பல இளையர்கள் ஒருசில காரணங்களுக்காகத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த உண்மையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறோம். 

“திறமை இருந்தும் வேண்டு மென்றே புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன், அதே விளையாட்டு தொடர்பான சூதாட்டக் களத்திற்குள் நுழைகிறான். அதன் பிறகு அவன் என்னவாகிறான்? என்னவெல்லாம் செய்கிறான்? என்பதுதான் இப்படத்தின் கதை. 

“இதுவரை ரசிகர்கள் அதிகம் கேள்விப்பட்டிராத 7  பேர் கொண்ட காற்பந்தாட்டம் குறித்துப் படம் விவரிக்கும்,” என்கிறார் குமரன். 

‘ஜடா’ ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என்றும் கதிர் யோகிபாபு கூட்டணியில் உருவான நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை மகிழ்விக்கும் என்றும் இவர் உறுதியளிக்கிறார்.