ஒரு வழியாகப் பிரச்சினைகளைக் கடந்து வெளியாகி உள்ளது ‘சங்கத்தமிழன்’. அதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விஜய் சந்தர் இயக்கத்தில் சேதுபதி நடித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இப்படத்தில் நாசர், சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்ளை ஏற்றுள்ளனர்.
விவேக் மெர்வின் இசையமைக்க, விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அச்சமயம் படப்பிடிப்பே முழுமையடையவில்லை என்றும் நவம்பர் இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வந்தன.
‘சங்கத்தமிழன்’ தமிழக வெளயீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, நெல்லை என தனித்தனியாக விநியோக உரிமையை விற்றது அந்நிறுவனம். மேலும் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது. எனினும் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் திடீர் சிக்கல் முளைத்தது.
‘சங்கத் தமிழ’னைத் தயாரித்துள்ள விஜயா புரொடக்ஷன்தான் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை தயாரித்தது. அப்படத்தை வெளியிட்ட வகையில், சில விநியோகஸ்தர்களுக்கு விஜயா நிறுவனம் பணம் கொடுக்க வேண்டி உள்ளதாம். இதேபோல் படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி இருந்ததாம்.
இதுபோன்ற விவகாரங்களால் படத்தின் வெளியீட்டிற்குக் கடைசி நேரத்தில் தடை ஏற்பட்டது. சற்றேறக்குறைய 5 கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழல் நிலவிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ‘சங்கத்தமிழன்’ விநியோக உரிமையைப் பெற்ற லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகர்.
இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து படம் வெளியானது. இதையடுத்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பல்வேறு அவமானங்களைத் தாங்கிக்கொண்டு ‘சங்கத்தமிழன்’ படத்தை வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார்.
“கிட்டத்தட்ட 48 மணி நேரம், பல பொய் குற்றச்சாட்டுகள், பல பொய்யான தகவல்கள் என் மீதும், என் லிப்ரா நிறுவனம் மீதும் சுமத்தப்பட்டன.
“இவை அனைத்துக்கும் பதிலும் உண்மையும் தெரிந்தும், எதையும் பேசாமல், எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல், எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, விஜயா புரொடக்ஷன் நிறுவனத்துக்கு நான் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற, பிரமாண்ட முறையில் விளம்பரப்படுத்தி 350க்கும் மேற்பட்டத் திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளோம்,” என ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் பல்வேறு இடைஞ்சல்கள், கேலிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எது நடந்தாலும் தனது நிறுவனம் கொண்டுள்ள கொள்கை, கருத்து மாறாது எனக் கூறியுள்ளார்.
“ஒருவர் மீது எளிதாகக் குற்றம் சுமத்தி, கேலி செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால், அவர்களுக்கான பதிலை காலம் நின்று சொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் எங்களுக்கு உள்ளது.
“எங்களு டைய ஒரே நோக்கம், எடுத்த வேலைகளைச் சரியாகவும் ஒழுங்காகவும் செய்து, அவற் றைச் சரியான இடத்துக்குக் கொண்டு செல்வது மட்டுமே.
“அதை எப்போதும் லிப்ரா செய்து கொண்டு தான் இருக்கும்,” எனவும் ரவீந்தர் சந்திரசேகரன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.