‘விருதுகள் உற்சாகம் தரும்’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கம் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.

அண்மையில் தனக்குக் கிடைத்த விருது இருமடங்கு உழைக்கவேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிதி நடிப்பில் 2020ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 5 படங்கள் வெளியாக உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிப் படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“தென்னிந்திய மொழிகளில் என்னைத் தேடிவரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தருகின்றன. அதனால்தான் அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.

“என்னைப் பொறுத்தவரை எந்த மொழியில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த மொழியாக இருப்பினும் நம் திறமையை வெளிப்படுத்த வேண்டும்,” என்கிறார் அதிதி.

அண்மையில் இவருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகுக்கு இவர் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டும் வகையில் இந்த விருதை அறிவித்துள்ளனர்.

“இந்த விருதுக்கு நான் தகுதியானவள் என்று தீர்மானித்த விருதுக் குழுவுக்கு நன்றி.

“இத்தகைய நிகழ்வுகளும் திருப்பங்களும்தான் ஒரு கலைஞருக்குத் துணிவான முடிவுகளை எடுக்கவேண்டும் எனும் தைரியத்தைத் தருகின்றன.

“அந்த வகையில் நான் பயமின்றி, தயக்கமின்றிச் செயல்படுகிறேன். இதைச் செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இதைச் செய்யாமல் போனால் நம்மைப் பற்றி என்ன பேசுவார்கள்? என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை.

“என் மனதுக்கு எது சரியெனப் படுகிறதோ அதைத் தயக்கமின்றி செய்கிறேன். அதனால்தான் சிறந்த நடிகை என்று சிலர் என்னைப் பாராட்டுகிறார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் சில சமயங்களில் வீழ்ச்சிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

“கீழே விழுந்தால் எழுந்து நிற்கவேண்டும் எனத் தோன்றும் பாடத்தைக் கற்றுக்கொண்டால் முன்னேற்றம் காண்பது உறுதி,” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் அதிதி.

விருதுகள் உங்களை உற்சாகப்படுத்துகின்றனவா என்று கேட்டால் விருதுகள் பெறுவது அற்புதமான தருணம் என்கிறார்.

“உங்களது திறமையும் பணியும் அங்கீகரிக்கப்படுவது நிச்சயம் மகிழ்ச்சி தரும். அங்கீகாரம் என்பது எந்த வகையில் கிடைத்தாலும் அவை வரவேற்கத்தக்கவை. இந்தாண்டு எனக்கு மேலும் இரு விருதுகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பும் சில விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.

“இன்றளவும் நான் எனது வேலையில் மிகுந்த ஈடுபாடு காட்டவும், சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் இந்த விருதுகள் வெகுவாகக் கைகொடுத்துள்ளன என்பதே உண்மை,” என்று சொல்லும் அதிதி, சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை.

ஏன் என்று கேட்டால், தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து யாரிடமும் எதுவும் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை என்கிறார்.

“இன்று சமூக வலைத்தளங்கள்தான் நம்மை ஆட்சி செய்கின்றன. அதேசமயம் சில விஷயங்கள் நமக்கு மட்டுமே உரியவை. இதை மனதிற் கொண்டு செயல்பட்டால் சிக்கலில்லை. எனது இந்தக் கருத்தை சிலர் ஏற்காமல் போகலாம். ஆனால் இதுதான் யதார்த்தம்,” என்கிறார் அதிதி.

தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று குறிப்பிடுபவர், சில சமயங்களில் சோம்பல் காரணமாக உடற்பயிற்சி செய்யமுடியாமல் போகிறது என்று வருத்தப்படுகிறார்.

“ஆனால், யோகாசனத்திற்கு மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்குகிறேன். இதன்மூலம் மனதில் அமைதியும் நிம்மதியும் நிலவும். எத்தகைய சூழ்நிலையிலும் நாம் நிதானம் இழக்கமாட்டோம். யோகா நம்மை மேலும் அழகாக்கும். தினமும் யோகா செய்பவர்களுக்கு நான் சொல்வது எந்தளவு உண்மை என்பது நன்கு புரியும்,” என்கிறார் அதிதி ராவ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!