‘தனுசு ராசி நேயர்களே’

‘பிக்பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகும் புதிய படம் ‘தனுசு ராசி நேயர்களே’. சஞ்சய் பாரதி இதை இயக்கியுள்ளார். 

இப்படம் தனக்கு ரசிகர்களிடம் நற்பெயர் வாங்கித்தரும் என்று உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் ஹரிஷ். 

படத்தின் தலைப்புக்கேற்ப ஜோதிடம், ராசியை நம்பும் ஓர் இளைஞனின் வாழ்வில் அவனது இந்த நம்பிக்கையால் ஏற்படும் பிரச்சினைகளை இப்படம் விவரிக்கிறதாம். மேலும், சில அதிரடி சம்பவங்களையும் எதிர்கொள்ளும் அந்த இளைஞன் அனைத்தையும் எப்படிச் சமாளிக்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து விவரித்திருப்பதாகக் கூறுகிறார் அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி.

எனவே, குடும்பத்துடன் திரையரங்கு சென்று பார்க்கும் வகையில் தரமான படைப்பாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறார் நாயகன் ஹரிஷ்.

ரெபா மோனிகா ஜான் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கூடுதலாக மேலும் இரு நாயகிகளும் உள்ளனராம். யோகிபாபு வழக்கம்போல் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பதாகத் தகவல்.

“ஜோதிட நம்பிக்கை உடைய கதாநாயகன் தனது ராசிக்கேற்ற பெண்ணைத் தேடுகிறார். அவரது ராசியுடன் ஒத்துப்போகும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவரது லட்சியம். 

“நடிகர் தனுஷை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையா? என்று பலரும் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. தொடக்கத்திலேயே ஹரிஷ் இந்தப் படத்தின் நாயகன் என்பதை முடிவு செய்துவிட்டோம். 

“நம் எதிர்வீட்டுப் பையனைப் போல் ஒருவர்தான் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்பது என் முடிவு. ஹரிஷ் என் எதிர்பார்ப்புக்கேற்ப இருந்தார். இன்னும் சரியாகச் சொல்வதானால் ஹரிஷைப் பார்க்கும்போது அந்தக் கால கார்த்திக்கை (நடிகர்) நினைவூட்டுகிறார். அதுவும் அவரைத் தேர்வு செய்ய முக்கியக் காரணம்,” என்கிறார் இயக்குநர் சஞ்சய் பாரதி.

படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பைப் பார்த்து இது வயது வந்தோருக்கான நகைச்சுவைப் படம் (அடல்ட் காமெடி) என்று முடிவு செய்யவேண்டாம் என்பது ஹரிஷ் கல்யாணின் வேண்டுகோளாக உள்ளது. அதனால்தான் குடும்பத்துடன் பார்க்காகூடிய படம் என விளம்பரப்படுத்துவதாகச் சொல்கிறார்.

“இதில் நாயகியின் பெயர் கே.ஆர். விஜயா. ஒரு மாற்றத்துக்காவும், பெயரைக் கேட்டால் சட்டென மனதை ஈர்க்கவேண்டும் என்பதற்காகவும்தான் இவ்வாறு பெயர் சூட்டினோம்.  படம் பார்க்கும்போது உங்களுக்கு மேலும் பல விஷயங்ககள் தெளிவாகப் புரியும். 

“ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள 5 பாடல்களுமே மனதைக் கவரும். ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும்,” என்கிறார் ஹரிஷ் கல்யாண்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரை காணும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.