‘மாஃபியா’ படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்கிறார் அருண் விஜய். இந்தப் படத்துக்கு இதைவிடப் பொருத்தமான தலைப்பை வைக்க முடியாது என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“வழக்கம்போல் இதுவும் பூனை, எலியைத் துரத்திப் பிடிக்கும் விளையாட்டுதான். அதேசமயம் ‘கேங்ஸ்டர்’ எனப்படும் நிழல் உலக மனிதர்கள் குறித்துக் கதை சொல்வது அவ்வளவு சுலபமல்ல. இப்படியொரு கதையில் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம்.
“கேங்ஸ்டர்’ என்று ஒற்றை வார்த்தையில் சுலபமாகப் பேசிவிடுகிறோம். ஆனால் அந்த உலகம் குறித்துப் பேசுவதற்கும் விவரிப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன,” என்கிறார் அருண் விஜய்.
நிழல் உலக மனிதர்கள் சிலர் ஒற்றை ஆளாக இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் நிஜத்தில் ஓர் அரசாங்கம் போன்று செயல்படுவார்கள் என்று குறிப்பிடுபவர், கேங்ஸ்டர்கள் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் மன உறுதியுடன் செயல்படக்கூடிய வர்கள் என்கி றார்.
“நிழல் உலக மனிதர்கள் கச்சிதமாகத் திட்டம் தீட்டிச் செயல்படக் கூடியவர்கள். அவர் களைப் பொறுத்தவரை இதுவும் ஒருவகையான ஹீரோயிசம்தான்.
“இத்தகைய செயல்பாடு தரக்கூடிய உணர்வுகளும் திகிலும் அவர்களுக்குப் பிடிக்கும். இன்னொருவரின் பயம்தான் தங்களது பலம் என்று சொல்வார்கள்.
“ஒருவகையில் இவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இந்தக் கதையை இயக்குநர் கார்த்திக் நரேன் என்னிடம் சொன்னபோது அதில் லயித்துப் போனேன்,” என்கிறார் அருண் விஜய்.
நிழல் உலகம் குறித்து நன்கு தெரிந்துகொண்டு அதன்பிறகே களம் இறங்கினாராம் கார்த்திக் நரேன். ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் இவர்.
‘மாஃபியா’ கதையை எழுதியபோதே அருண் விஜய்தான் நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து விட்டாராம். அருண் விஜய் இயக்குநர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து நடிக்கக்கூடியவர் என்கிறார்.
“அருண் விஜய் சாரை வைத்து ஒரு படைப்பாளி எந்த விளையாட்டையும் சுதந்திரமாக ஆட முடியும். இயக்குநர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு நடிப்பை வெளிப் படுத்துகிறார்.
“ஓர் இயக்குநராக நான் எதை அடைய நினைக்கிறேனோ அதுவரை துணை நிற்பார். நல்ல திடகாத்திரமான கதாபாத்திரம். நல்ல தலைமைப் பண்பும் துணிச்சலும் உடனே முடிவெடுத்து வழி நடத்தும் திறனும் இருக்கவேண்டும்.
“இப்படிப்பட்ட நாயகன்தான் இந்தக் கதைக்குத் தேவை என்று சொல்லி முடித்த அடுத்த கணமே இதில் நான் நடிக்கிறேன் என்றார். நான் எதிர்பார்த்தபடியே பிரம்மாதமாக நடித்துள்ளார்,” என்று பாராட்டுகிறார் கார்த்திக் நரேன்.
‘மாஃபியா’வில் பிரசன்னாதான் வில்லன். தான் வில்லன் என்பதை நடிப்பில் காட்டக்கூடாது என்றும் வழக்கமான நடவடிக்கையின் மூலம் ஒருவித வில்லத்தனம் ஒரு விதமாக வெளிப்பட வேண்டும் என்று இயக்குநர் கூறியதை மனதில் ஏற்றிக்கொண்டு கச்சிதமாக நடித்துள்ளாராம்.
“அருணும் பிரசன்னாவும் கொஞ்சம்கூட ஈகோ இல்லாமல் இணைந்து நடித்துள்ளனர். இந்தக் காலத்து நடிகர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். தங்களை நிலைநிறுத்திக்கொள்ள மழை, வெயில் என்று எதையும் பார்ப்பதில்லை. என் படத்தில் கூடுதலாக உழைப்பைக் கொட்ட வேண்டி இருக்கும். அதைப் புரிந்துகொண்டு இருவரும் நடித்தமைக்கு நன்றி சொல்லவேண்டும்.”
நாயகி பிரியா பவானி சங்கர் குறித்து?
“இதுவரை அவரை அடுத்த வீட்டுப் பெண்ணாகத்தான் திரையில் பார்த்திருக்கிறோம். இதில் சற்று மாறுபட்ட, அருமையான கதாபாத்திரத்தில் வருவார். அவரைப் பற்றி நிறைய சொல்லமுடியும். சுருக்கமாகக் குறிப்பிடுவது என்றால் பிரம்மாதமான நடிகை,” என்கிறார் கார்த்திக் நரேன்.
‘மாஃபியா’வுக்கு இசையமைத்திருப்பவர் பிஜோய். பின்னணி இசையிலும் பாடல்களிலும் அசத்தி இருக்கிறாராம். கோகுல் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கும் என்று குறிப்பிடும் கார்த்திக் நரேன், ஒட்டுமொத்தத்தில் மிகச்சிறந்த படைப்பை ரசிகர்களுக்கு அளிக்கப் போவதாகச் சொல்கிறார்.
“நான் இயக்கியுள்ள ‘நரகாசுரன்’ படம் பல பிரச்சினைகளால் முடங்கிப் போயுள்ளது. அப்படம் விரைவில் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்கிறார் கார்த்திக் நரேன்.