“எங்கள் படத்தில் ஒப்பந்தமாகும் போது ‘பரியேறும் பெருமாள்’ வெளியாகவில்லை. அதற்கும் முன்பே வெளியான ‘கிருமி’யில் கதிரின் நடிப்பு எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் என் கதையின் நாயகனாக அவரை நடிக்கவைத்தேன்,” என்கிறார் குமரன்.
இவர் கதிர் நாயகனாக நடிக்கும் ‘ஜடா’ படத்தின் இயக்குநர். ‘பிகில்’ படத்தையடுத்து காற்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் புதுப்படம் ‘ஜடா’.
கதாநாயகன் கதிர் என்ன சொல்கிறார்?
“கதைக்கான தெரிந்த முகம், என்னுடைய பட்ஜெட்டுக்குள் அடங்கும் நாயகன் தேவைப்பட்டார். இரண்டுக்கும் கதிர் பொருந்தி வந்தார்.
“கதிர் ரொம்ப நட்பாகப் பழகக் கூடியவர். ஒரு நாயகனாக எங்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். இயக்குநரின் நடிகராகவே தன்னை வெளிப்படுத்தினார். காற்பந்து விளையாடுவதற்காக இரண்டு மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
“இந்திய காற்பந்து அணியைச் சேர்ந்த இருவர் சிறப்புப் பயிற்சி அளித்தனர். முதல் பட இயக்குநருக்கு கதிர் மாதிரி நாயகன் கிடைப்பது வரம்.
“படப்பிடிப்பு தளத்தில் என்ன கேட்கிறேனோ அதை அப்படியே கொடுப்பார். இந்தப் படத்துக்காக நிறைய விஷயங்களில் அதிக முயற்சி எடுத்து நடித்தார்.
“படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார். ஆனால் நகைச்சுவைக் காக மட்டுமின்றி நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்திலும் தோன்றுவார்.
“நிஜத்திலும் யோகிபாபு ஒரு காற்பந்து வீரர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. யோகி அண்ணனை ரசிகர்களுக்கு நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரியும். அவர் இந்தியன் ரயில்வே அணி தேர்வு வரை போயிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் காயம் ஏற்பட்டதால் காற்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டார்.
“நான் கதை சொல்லும்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிக்க மறுத்தார். பிறகு படத்தில் அவருடைய போர்ஷனை மட்டும் சொன்னேன். கதையில் அவர் நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஒரு கட்டத்தில் நாயகன்போல் உயர்ந்து நிற்பார். அந்த இடம் அவருக்குப் பிடித்திருந்ததால் நடிக்கச் சம்மதித்தார்.”
நாயகி ரோஷினி குறித்து?
“தெலுங்கில் சில தரமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுதான் முதல் படம். படத்தில் காதல் பகுதி குறைவாகத்தான் இருக்கும். அருமையாக நடித்துள்ளார்.
“படத்தில் வில்லன் இருக்கிறார். ஆனால் யார் வில்லன் என்பது உச்ச காட்சியில் மட்டுமே தெரியும் என்பதால் அதுவரை ரகசியமாக இருக்கட்டும்.
“ஜடா’ காற்பந்து சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் போட்டித் திடல்கள், அரங்குகள் என்று கதையை நகர்த்தாமல், காற்பந்து வீரர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்.
“அறிமுக இயக்குநராக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்துக்கு வராமல் முழுப் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி,” என்கிறார் குமரன்.