வீரா, மாளவிகா இணைந்து நடித்துள்ள படம் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’. காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் இயக்கியுள்ளார்.
வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளனர்.
“இது எங்களது கனவுப் படம். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாக்கி உள்ளோம்.
“மிகைப்படுத்துவதாக நினைத்துவிட வேண்டாம். ஒவ்வொரு காட்சியும் படம் பார்ப்பவர்களை விலா நோகச் சிரிக்க வைக்கும்.
“பல்வேறு கதாபாத்திரங்களை மையப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்,” என உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர்.
இப்படத்துக்கு மேட்லி புளூஸ் இசையமைக்க, சுதர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
திலீப் சுப்பராயன் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் இளையர்களைக் கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளனவாம். ஆரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
“ஒரு தயாரிப்பாளராக நல்லதொரு தரமான நகைச்சுவைப் படத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டும் எனும் ஆசை நிறைவேறி உள்ளது.
“நாயகன், நாயகி, இயக்குநர் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் சிறப்பாகப் பணியாற்றியது நல்ல விஷயம்,” என்று திருப்தியும் பாராட்டும் தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால்.