சுமார் 10 படங்களில் நடித்து முடித்துவிட்டார் ஸ்ரீ பிரியங்கா. எனினும் ‘மிக மிக அவசரம்’ படம் தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது.
படம் பார்த்த அனைவருமே அவரது நடிப்பைப் பாராட்டியது உச்சி குளிர்ந்து போயிருக்கிறார் அந்த இளம் நாயகி.
புதுச்சேரியில் உள்ள திருக்கனூர் கிராமம்தான் இவரது சொந்த ஊர்.
தந்தை பழரசம் விற்கும் கடை வைத்திருந்தாராம். பெற்றோர், ஒரே அண்ணன், இவர் என்று பிரியங்காவின் குடும்பம் சிறியது.
ஒருமுறை பழரசக் கடையில் இவரைப் பார்த்த இயக்குநர் ஆண்டாள் ரமேஷ், சினிமாவில் நடிக்க அனுமதிப்பீர்களா என்று ஸ்ரீபிரியங்காவின் தந்தையிடம் கேட்டுள்ளார்.
“அப்பாவுக்கு ரொம்பத் தயக்கம். சம்மதிக்கலாமா வேண்டாமா? என்று யோசித்தார்.
“ஆனால், சினிமாவில் நடிக்க எனக்கு ரொம்ப விருப்பம். அதனால் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
“நான் நடித்த முதல் படம் ‘அம்மன்’. அதன் பிறகு தொடர்ச்சியாக 10 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன்.
“இப்போதுதான் நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன,” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் ஸ்ரீபிரியங்கா.
இவர் சினிமாவில் நடிக்க வந்தது அண்ணனுக்கு அறவே பிடிக்கவில்லையாம்.
இதனால் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தையே இல்லையாம்.
அண்மையில்தான் சமாதானமாகியுள்ளனர். தற்போது அண்ணனும் சினிமாத் துறையில்தான் பணியாற்றுகிறார்.
‘மிகமிக அவசரம்’ பெண் காவலர்கள் படும் கஷ்டங்களை மிகத் தெளிவாக, கச்சிதமாக அலசியுள்ள நல்ல படைப்பு.
படம் பார்த்த பெண் காவலர்கள் என்ன கூறினார்கள்?
“இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் காமாட்சி சார் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்குத்தான் வெளியிட்டுக் காண்பித்தார்.
“படம் பார்த்த அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியதோடு பெண் காவலர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறினர்.
“இதையடுத்து 200 பெண் காவலர்களை வரவழைத்துப் படத்தைத் திரையிட்டார் இயக்குநர். அவருடன் நானும் படம் பார்த்தேன். அந்தப் பெண்கள் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நான் மட்டும் அவர்களைப் பார்த்தபடி இருந்தேன்.
“இவர்கள் என்ன நினைப்பார்கள், என் நடிப்புப் பிடித்திருக்கிறதா? யதார்த்தமாக நடித்துள்ளோமா? என்று மனதில் பலவிதமான கேள்விகள். படம் முடியும் வரை பதற்றமாக இருந்தேன்.
“ஆனால் இறுதிக் காட்சி முடிந்ததும் அத்தனைப் பெண் காவலர்களும் கைதட்டினர். என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘எங்களைப் போலவே வாழ்ந்து காட்டியிருக்கீங்க’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்குப் புல்லரித்துப் போனது.”
இப்படத்தின் விளம்பர நிகழ்வுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தாராம். அப்போது பேசிய பிரியங்கா, தமிழ் தெரிந்த நடிகைகளுக்கு கோடம்பாக்கதில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதில்லை எனும் தன் நீண்ட நாள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“அதைக் கேட்டதும் சேதுபதி சார், ‘நிச்சயம் உனக்கு என் படத்தில் வாய்ப்புத் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்காக காத்திருக்கிறேன்,” என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
கொசுறு: குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவார், அதிக சம்பளம் கேட்க மாட்டார், படத்துக்காக மிகவும் மெனக்கெடுவார் என்று கோடம்பாக்கத்தில் பிரியங்காவுக்கு நல்ல பெயர் உள்ளது.