குட்டி ராதிகா நடிப்பில் நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘தமயந்தி’ விரைவில் வெளியீடு காண உள்ளது.
குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, ரஜினியின் நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
1980ஆம் ஆண்டு கதாநாயகியின் குடும்பத்தை சமூக விரோதிகள் ஒட்டுமொத்தமாக அழித்து விடுகிறார்கள். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நாயகி முன்பு வசித்த அரண்மனையில் இருந்து அவரது ஆவி எதிர்பாராத விதமாக வெளியே வருகிறது.
இதையடுத்து தன்னையும் குடும்பத்தையும் அழித்தவர்களை ஒவ்வொருவராகத் தேடிப் பிடித்து அழிக்கத் துடிக்கிறது அந்த ஆவி. இதையொட்டி நடைபெறும் சம்பவங்களை விவரிக்கும் படைப்பாக உருவாகிறது ‘தமயந்தி’. படத்தின் இயக்குநர் நவரசன்.
படம் முழுவதும் காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நகருமாம். பெரும் பொருட் செலவில் காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தாலும், குட்டி ராதிகாவின் அர்ப்பணிப்பும் மெனக்கெடலும் தம்மை வெகுவாக ஆச்சரியப்படுத்தியதாகச் சொல்கிறார் இயக்குநர்.
“ஒரு காட்சியில் கண் சிமிட்டாமல் லென்ஸ் பொருத்தி நடிக்க வேண்டும் என்று ராதிகாவிடம் கூறினேன். அவரும் சரி என்று நடித்தார்.
“மொத்தம் 3 நிமிடம் 16 வினாடிகள் கண் சிமிட்டாமல் ஒரே டேக்கில் நடித்து அசத்தினார். அதைப் பார்த்து படக்குழுவினர் கைதட்டிப் பாராட்டினார்கள். ஆனால் விளக்கு வெளிச்சத்தின் சூட்டின் காரணமாக அவருடைய கண்களில் இருந்த லென்ஸ்சுகள் உருகிவிட்டன. அதற்காக சிகிச்சை பெற்றார்,” என்கிறார் நவரசன்.
மருத்துவர் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியும் கூட, ஒன்றிரண்டு மணி நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினாராம் ராதிகா.
இப்படி மெனக்கெட்டு நடித்ததால் தான் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை ரசிகர்கள் பலர் இன்னும் நினைவில் வைத்துள்ளதாகப் பாராட்டுகிறார் இயக்குநர்.