எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்றும் அதனால்தான் வணிக ரீதியான படங்களைத் தேர்வு செய்து நடிப்பதாகவும் சொல்கிறார் சிவகார்த்திகேயன்.
அண்மைக் காலங்களில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படம்தான் தமக்குப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவா நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‘ஹீரோ’. சில தடைகளைக் கடந்து விரைவில் வெளியாக உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டம், கார்ப்பரேட் அரசியல் குறித்து அலசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மைதானா என்று கேட்டால், ஆமாம் என ஆமோதிக்கிறார்.
“இப்படத்தின் நாயகன் கல்வித்திட்டத்தை மாற்றச் சொல்கிறாரா என்பது முக்கியமல்ல. மாறாக, இப்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அலசி இருக்கிறோம்.
“அதேசமயம் வணிக அம்சங்களுடனும் உலகத் தரத்திலும் ஒரு படைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை மனதிற்கொண்டு முயற்சி செய்திருக்கிறோம்,” என்கிறார் சிவா.
திடீரென அறிவியலும் கற்பனையும் சார்ந்த கதைகள், சூப்பர் நாயகன் போன்ற கதைகளில் நடிக்க சிவா விரும்புவதாகவும் இதெல்லாம் அவருக்கு ஒத்துவருமா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து கேட்டால், தயாரிப்பாளரின் நலனை மனதிற்கொண்டே தாம் கதைக்களங்களைத் தேர்வு செய்வதாகச் சொல்கிறார்.
“என்னை நம்பி பணத்தைக் கொட்டும் தயாரிப்பாளர்கள் அதை லாபத்துடன் திரும்பப் பெறவேண்டும். இதுதான் எப்போதும் நான் என் மனதில் போடும் கணக்கு.
“இந்த வட்டத்துக்குள் உட்கார்ந்துகொண்டு ரசிகர்களைத் திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்யமுடியும் என்றும் யோசிக்கிறேன். உண்மையில் இந்த அடிப்படையில்தான் எனது சம்பளத்தையும் தீர்மானிக்கிறேன்.”
தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படம் தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாகச் சொல்பவர், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர் என்கிறார்.
யாரிடமும் சாத்தியப்படாத நடிப்பு மொழியும் உடல் மொழியும் தனுஷிடம் இருப்பதாகக் குறிப்பிடுபவர், ‘காதல் கொண்டேன்’ படத்திலேயே இவற்றை தனுஷிடம் கண்டதாகச் சொல்கிறார்.
“அன்று நான் அவரிடம் கண்கூடாகக் கண்ட இந்த திறமைகள் இன்னும் இன்னும் என்று அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றபடி உள்ளன. தனுஷ் சார் பக்கத்தில் இருந்து அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
“3 படத்தில் நடித்தபோது அவரது முகத்தில் காணப்படும் சின்னச் சின்ன அசைவுகள் ரசிக்கவைக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர்,” என்று மனம் திறந்து பாராட்டுகிறார் சிவா.
‘நம்ம வீட்டுப் பிள்ளை’ வெற்றி குறித்து?
“ஹீரோ படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் துவங்கியபோது வில்லன் யார் என்பது முடிவாகவில்லை. இதுதொடர்பாக ஆலோசனை நடந்த வேளையில் தான் இயக்குநர் பாண்டிராஜ் சார் என்னைச் சந்தித்தார்.
“இருவரும் சேர்ந்து ஒரு படம் செய்வோம். 7 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள். குழந்தைகளுக்கான படமாக எடுத்துவிடுவோம் என்றார். அவரது கதை ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. குழந்தைகளுக்கான படத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் ‘கடைக்குட்டி’ போன்று ஒரு படம் செய்ய முடிவு செய்தோம். அதுவே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படமாகும்,” என்று சொல்லும் சிவா, தமது அண்மைய சில படங்கள் சரியாக ஓடவில்லை என்பதை ஏற்க இயலாது என்கிறார்.
அந்தப் படங்கள் அனைத்துமே தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக அமைந்ததாகக் குறிப்பிடுபவர், அதேசமயம் கதைத் தேர்வில் கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்.