பொதுவாக ஆண்டு இறுதியிலும், புத்தாண்டு துவக்கத்திலும் படங்களை வெளியிடுவதில் கடும் போட்டி நிலவும்.
அந்த வகையில் வரும் டிசம்பரில் 30 தமிழ்ப் படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் முதல் குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்கள் வரை வரிசையில் காத்திருக்கின்றன.
பா. ரஞ்சித் தயாரித்து தினேஷ், ஆனந்தி ஜோடி சேர்ந்துள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘தனுசு ராசி நேயர்களே’, சுந்தர் சி.யின் ‘இருட்டு’, கதிர் நடித்துள்ள ‘ஜடா’ ஆகியவை டிசம்பர் 6ஆம் தேதி வெளியீடு காண்கின்றன.
இதையடுத்து டிசம்பர் 13ஆம் தேதி பரத்தின் ‘காளிதாஸ்’, மாதவன் அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ ஆகியவையும், டிசம்பர் 17ஆம் தேதி சுசீந்திரன் இயக்கியுள்ள ‘சாம்பியன்’ படமும் வெளியாகின்றன.
ஜி.வி. பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ஜீவாவின் ‘சீறு’, விமலின் ‘கன்னிராசி’, ‘ஹீரோ’, ‘தம்பி’, ஆகியவை டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
இதேபோல் டிசம்பர் இறுதியில் ‘நாடோடிகள் 2’, ‘கேப்மாரி’, ‘ராக்கி’, ‘அல்டி’, ‘வேழம்’, ‘சைக்கோ’ ஆகிய படங்கள் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இவ்வளவு படங்கள் வெளியீடு கண்டாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களின் வசூல் பாதிக்கப்படாது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
எனினும் தயாரிப்பாளர்கள் மத்தியில் திரையரங்குகளைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறதாம். குறிப்பாக டிசம்பர் இறுதியில் வெளியாகும் படங்கள் மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘தர்பார்’ வெளியாவதால் அதற்கு முன்னதாகவே தங்களது படங்களை வெளியிட வேண்டுமென சிறு தயாரிப்பாளர்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பதாகத் தகவல்.