கவலை மறந்து சிரிக்க வைக்கும் ‘டகால்டி’

சந்தானம் நடிப்பில் வெளியாக இருக்கும் புதுப்படம் ‘டகால்டி’. வங்காள மொழி நடிகை ரித்திகா சென் நாயகியாக நடித்துள்ளார். 

மேலும் தெலுங்குப் பட உலகைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், ராதாரவி, ரேகா, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சந்தானத்துக்கு இணையான வேடத்தில் அசத்துவாராம் யோகிபாபு. 

சங்கரிடம் பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சென்னை, திருச்செந்தூர், மும்பை, ஜெய்ப்பூர், பூனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். 

தலைப்பைப் போலவே படமும் வித்தியாசமாக இருக்குமாம். சந்தானத்தின் வழக்கமான நகைச்சுவை உண்டு என்றாலும் யோகிபாபுவுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அவரே கூறிவிட்டாராம்.

“சந்தானம் கதாநாயகனுக்குரிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் நகைச்சுவைப் பகுதிக்கு யோகிபாபுவின் பங்களிப்பு சற்று அதிகம் இருக்கும். படக்குழு எதிர்பார்த்தது போலவே அவரும் சிறப்பாக நடித்துள்ளார். 

“யோகியும் சந்தானமும் இணைந்து திரையில் தோன்றும் காட்சிகள் கவலை மறந்து சிரிக்க வைக்கும். பாடல் காட்சிகள் சிறப்பாக உருவாகி உள்ளன. வெளிநாட்டு மாடல் அழகிகள் அசத்துவார்கள்,” என்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த்.