பனிடா: முத்தக்காட்சியில் நடிப்பது பெரிய விஷயமல்ல

முத்தக் காட்சியில் நடிப்பதெல்லாம் தமக்குப் பெரிய விஷயமே இல்லை என்கிறார் இளம் நாயகி பனிடா சாந்து. 

‘ஆதித்ய வர்மா’ மூலம் தமிழ்ச் சினிமாவில் கால்பதித்துள்ள இவர், தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் தமிழில் தயக்கமின்றி நடிக்கப் போவதாகச் சொல்கிறார். 

அதுமட்டுமல்ல, எப்போதும் நாயகியாக மட்டுமே நடித்துக் கொண்டிருப்பதில் இவருக்கு ஆர்வமில்லையாம். மாறாக வில்லி வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறாராம்.

“ஒரு நடிகையாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதேசமயம் அவை எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களாகவும் அமைய வேண்டும் என்பது முக்கியம். 

“என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒருவித வில்லத்தனம் இருக்கும். அதைத் துல்லியமாக அடையாளம் கண்டு சரியான கோணத்தில் காட்சிப்படுத்தினால், அந்த நடிப்புக்கு வரவேற்பு கிடைக்கும்,” என்கிறார் பனிடா.

லண்டனில் வசித்து வரும் இவர், அங்கு உள்ளூர் படைப்புகளில் நடித்து வருகிறார். மேற்கத்திய சூழலில் முத்தம் கொடுப்பது, பெறுவது எல்லாம் சர்வ சாதாரணம் என்கிறார்.

“நான் லண்டனில் வளர்ந்து ஆளானவள். முத்தம் என்பது கலாசாரம் சம்பந்தப்பட்டது. லண்டனில் உருவாகும் படத்தில் நான் மரத்தைச் சுற்றிப் பாடி ஆடுகிறேன் என்றால் அது விவாதப்பொருளாகி இருக்கும்.  ஆனால், முத்தக் காட்சிகளும் அந்தரங்கக் காட்சிகளும் அங்கு வழக்க மான ஒன்று. வெறும் நடிப்புக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.”

லண்டனில் இருந்து கோடம்பாக்கம் வரை பறந்து வந்து ‘ஆதித்ய வர்மா’வில் நடிக்கத் தூண்டியது எது?

“‘வர்மா’ என்ற பெயரில் உருவான இப்படம் திடீரென கைவிடப்பட்டது. இதுதான் என் கவனத்தை ஈர்த்த முதல் அம்சம். இரண்டாவது முறையாக ஒரு படத்தை உருவாக்குகிறார்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. 

“மிகத் தரமான படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. 

“விக்ரம் சார், ரவி கே. சந்திரன் சார் எனப் பெரிய கலைஞர்களும் அனுபவஸ்தர்களும் இணைந்து பணியாற்றும் படம். அதிலும் ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற வெற்றிப் படத்தின் மறுபதிப்பு என்பதெல் லாம் என்னைக் கவர்ந்த மற்ற அம்சங்கள். 

“அதனால்தான் தயக்கமின்றி பறந்து வந்தேன், நடித்தேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், நல்ல படங்களில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்பும் எந்த நடிகையும் இதைத் தான் செய்வார்.  நல்ல படங்களில் நடிப்பதே எனது இலக்கு,” என்கிறார் பனிடா.