‘தர்பார்’ பட இசை வெளியீட்டு விழாவில் கமல் சுவரொட்டி மீது சாணி அடிப்பேன் என்று பேசிய ராகவா லாரன்ஸ் கமல்ஹாசனை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அண்மையில் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ பட இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், “ரஜினிகாந்த் படம் வெளியாகும்போது சுவரொட்டி ஒட்டுவதற்காக சண்டை போட்டிருக்கிறேன். கமல்ஹாசனின் சுவரொட்டி ஒட்டினால் அதில் சாணி அடிப்பேன். அப்போது எனது மனநிலை அப்படி இருந்தது,” என்றார்.
இந்தப் பேச்சினால் கமல்ஹாசனின் ரசிகர்கள் ராகவா லாரன்சைப் பற்றியும் அவரின் குடும்பத்தினரைப் பற்றியும் தரக்குறைவாக இணையத்தில் பதிவிடத் தொடங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார் லாரன்ஸ்.
சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், “அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
“எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கெனவே நான் விளக்கமளித்துள்ளேன். இந்நிலையில் கமல்ஹாசனை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் என்னை அன்புடன் நலம் விசாரித்து
வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.