தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு படம் ஒரே ஆண்டில் வெளிவருவதே அதிசயமாக இருக்கும் நிலையில் தனுஷின் 5 படங்கள் அடுத்த ஆண்டு அதாவது 2020ஆம் ஆண்டு வெளிவர இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய ‘சுருளி’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ திரைப்படமும் ராம்குமார் இயக்கவுள்ள சத்யஜோதி தயாரிக்கும் திரைப்படமும் 2020ஆம் ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் சன் பிக்சர்ஸ் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த படமும் அனேகமாக அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட இந்த படங்கள் அடுத்தாண்டு வெளியாக உள்ளதால் 2020ஆம் ஆண்டு தனுசு ரசிகர்களுக்கு குஷியான ஆண்டாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதற்கிடையில் இந்த ஐந்து படங்களில் ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் ஓர் இரவில் உலகப் புகழ் பெற்றவர் அனிருத். அவரை தனது ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் தனுஷ்.
இருவரும் அடுத்தடுத்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய படங்களில் கூட்டணி சேர்ந்தனர். சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கிய ‘பீப்’ பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அனிருத்தை தன் படங்களுக்கு இசையமைக்க வைப்பதை தனுஷ் தவிர்த்து வந்தார். நான்கு ஆண்டுகளாக தனுஷும் அனிருத்தும் பிரிந்து இருந்தனர்.
தற்பொழுது இந்த நண்பர்கள் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இது உறுதியாகுமா? அல்லது காற்றில் வந்த செய்தியாக கரைந்து போகுமா? என்பது விரைவில் தெரியவரும் என்கிறது தமிழ்த்திரை உலகம்.