நடிகர்கள் வீட்டு பிள்ளைகள் நடிக்க வருவது ஒன்றும் புதிது இல்ல. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகர் பிரேமின் மகன் கௌஷிக்கை ‘அடுத்த சாட்டை’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் சமுத்திரகனி.
இந்நிலையில் இயக்குநர் ஆக ஆசைப்பட்ட கௌஷிக் நடிகர் ஆனது குறித்து தமிழக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “நான் ‘குங்கும பொட்டு கவுண்டர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன். மேலும் ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளேன்.
“படம் இயக்குவது பற்றி திரைப்பட கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, நான் நடிகனாக விரும்பவில்லை.
“‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். அப்பொழுதுதான் நடிக்கும் ஆசை ஏற்பட்டது.
“அப்பாவிடம் என் ஆசையை சொன்ன போது, சினிமாவில் வெற்றி பெற ஒழுக்கம், நேரம் தவறாமை, கடின உழைப்பு ஆகியவை முக்கியம் என்றார்.
“ரஜினி முருகன் படப்பிடிப்பில் என்னை உதவி இயக்குநராக பார்த்த சமுத்திரக்கனி சார், எனக்கு நடிக்க விருப்பமிருப்பதை அறிந்து, என்னை அவருடைய படத்தில் அறிமுகம் செய்து வைப்பதாக அப்பாவிடம் சொன்னார்.
“சில நாட்கள் கழித்து ‘வெள்ளை யானை’ படப்பிடிப்பில் இருந்த சமுத்திரகனி என்னை அழைத்தார். அப்போது அவருடன் ‘அடுத்த சாட்டை’ படத்தின் இயக்குநர் அன்பழகன் சார் இருந்தார்.
“என்னை பார்த்ததும் அவர்களுக்குள்ளேயே பேசிவிட்டு நீ போ என்றார்கள். பின்னர் ஆடை அலங்கார தேர்வுக்கு அழைத்து, எனக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தார்கள்.
“தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையாவுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
“நாங்கள் தவறு செய்தாலும் இயக்குநர் கோபப்பட்டு திட்டாமல் தனக்கு என்ன வேண்டும் என்பதை பொறுமையாக விளக்குவார்.
“அடுத்த சாட்டை படத்தைப் பார்த்த பிறகு என்னை தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் இன்னும் எந்த கதையையும் தேர்வு செய்யவில்லை, என்றார் கௌஷிக்.