கோடம்பாக்கமே வியக்குமளவுக்கு பன்னிரண்டு நாட்களில் முழுப் படத்தையும் எடுத்து முடித்துள்ளார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான நவீன் மணிகண்டன். படத்தின் பெயர் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’.
இதை சாகுல் அமீது தயாரித்திருக்கிறார். எஸ்.ஆர்.ராம் இசையில், பாடல்களை கவி கார்கோ, ஹரிதாஸ் எழுதியுள்ளனர்.
நாயகனாக விகாஷும், மதுமிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா, வெங்கடேஷ், பிரவீன் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, எப்படி தயாராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததால் தான் படத்தை 12 நாட்களில் முடித்தாகச் சொல்கிறார் இயக்குநர் நவீன் மணிகண்டன்.
“சினிமா துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றியதுடன், ஒளிப்பதிவு உதவியாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன்.
“இந்த அனுபவங்கள் பல்வேறு நுட்பமான விஷயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளன. பல இயக்குநர்களுடன் பணியாற்றியது தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளித்துள்ளது. இது இளையர்களுக்கான படம். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்.
“பொறுப்பில்லாமல் இருக்கும் நாயகனைத் திருத்த அவரது தந்தை பல்வேறு விதமாக முயற்சித்தாலும் எதுவும் உருப்படியாக நடக்கவில்லை.
“ஒரு கட்டத்தில் அதே தந்தைக்காக நாயகன் பொறுப்பானவராக மாறுகிறார், அதற்கு அவரது காதலியும் முக்கிய காரணமாக அமைகிறார். இப்படியொரு மாற்றம் எப்படிச் சாத்தியமானது என்பது தான் கதை.
“சித்ராவும் டெல்லி கணேஷும் நாயகனின் பெற்றோராக நடித்துள்ளனர். அவர்கள் இடம்பெறும் காட்சிகள் உணர்வுப்பூர்வமாகவும், சற்றே நகைச்சுவையாகவும் இருக்கும். இளையர்களைத் திருப்திபடுத்தும் அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன.
“அதனால் தான் அனைத்துத் தரப்பினரையும் இப்படம் கவரும் என தைரியமாகச் சொல்கிறேன்,” என்கிறார் நவீன் மணிகண்டன்.
பொதுவாக ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதற்கு இயக்குநர்களிடம் சரியான திட்டமிடல் இல்லாததும், அதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரிப்பதும் தான் காரணம் என்று பல தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நவீன் மணிகண்டனின் இந்தத் திட்டமிடல் கோடம்பாக்க பிரமுகர்களை வியக்கவும் பாராட்டவும் வைத்துள்ளது.