‘நல்ல படங்களே தேவை’

‘ஹீரோ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.

தந்தை பெயர் பெற்ற இயக்குநர். தாய் லிசி, ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகி. இருப்பினும் எந்தவிதமான பந்தாவுமின்றி இயல்பாகப் பேசிப் பழகுகிறார் கல்யாணி.

‘ஹீரோ’ படம் வழக்கம்போல் கதாநாயகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் படம். அதிலும் சூப்பர் ஹீரோ கதை என்பதால் நாயகியின் பங்களிப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

எனினும் இந்தப் படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் கால் பதித்திருக்கிறார் கல்யாணி. இந்தப் படத்தில் நடிக்க இவரின் தந்தை கூறிய அறிவுரைதான் காரணமாம்.

“நாம் எவ்வளவு நேரம் திரையில் தோன்றுகிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு நல்ல படைப்பில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று அப்பா எனக்கு அறிவுரை கூறினார். என்னைப் பொறுத்தவரை ‘ஹீரோ’வும் அப்படிப்பட்ட ஒரு படைப்புதான். அதனால்தான் அதில் நடித்தேன்,” என்கிறார் கல்யாணி.

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஹலோ’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அதில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ‘ஹீரோ’ பட நாயகியாக நடிப்பதற்கு கல்யாணியின் முகத்தில் போதுமான முதிர்ச்சி தென்படவில்லை என்று கூறி இயக்குநர் மித்ரன் இவரை நிராகரித்துவிட்டாராம். அதன்பிறகு சமூக வலைத்தளத்தில் கல்யாணி வெளியிட்ட புதிய புகைப்படங்களைப் பார்த்த பிறகே அவரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

கல்யாணி சென்னையில்தான் வசிக்கிறார். தமிழிலும் நன்றாகப் பேசுகிறார். இருப்பினும் ‘ஹீரோ’வில் இவருக்கு சின்மயி இரவல் குரல் கொடுத்திருக்கிறார்.

“நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்குத் துணிச்சலும் வீரமும் நிறைந்த குரல் தேவைப்பட்டது. எனக்கு அப்படிப்பட்ட ஒரு குரல் இல்லை. எனவேதான் சின்மயியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும்கூட என்னிடம், ‘நீங்களே பின்னணி பேசலாமே’ என்று தைரியமூட்டினார். ஆனால் எனக்குத்தான் படபடப்பாக இருந்தது. எனவே முடியாது என்று கூறிவிட்டேன்,” என்று வெளிப்படையாகப் பேசும் கல்யாணி, சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகையாம்.

படப்பிடிப்பின்போது அவர் மிக இயல்பாக இருந்ததால் தம்மால் இயல்பாக நடிக்க முடிந்ததாகச் சொல்கிறார். அதுமட்டுமல்ல, வசனத்தை எப்படிப் பேச வேண்டும் என்றும் எந்த நேரத்தில் வசனங்களுக்கு ஏற்ப முகபாவங்களை மாற்றவேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தாராம் சிவா.

“அவரது இந்தக் குணாதிசயம் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. சிவகார்த்திகேயன் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராக உள்ளார். அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல, அவருக்குள் ஓர் இயக்குநரும் ஒளிந்திருக்கிறார். எதிர்காலத்தில் அவர் நிச்சயமாக ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன்”.

இவரது தந்தை பிரியதர்ஷன் பெரிய இயக்குநர் என்கிற நிலையில் அவரே தன் மகளை வைத்து ஏன் படம் இயக்கக்கூடாது என்று பலரும் கேட்கிறார்களாம். அத்தகைய கேள்விகளுக்கு கல்யாணி தயாராக ஒரு பதிலை வைத்துள்ளார்.

“அண்மையில்கூட அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் அதன்பிறகு இனி அப்பாவுடன் இணைந்து பணியாற்றுவதில்லை என முடிவு செய்துவிட்டேன். உண்மையில் அவருடன் பணியாற்றுவது ஒருவித பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது.

“இப்படிப்பட்ட உணர்வுகளுடன் நம்மால் கச்சிதமாக நடிக்க முடியாது. படப்பிடிப்பின்போது என்னைப் பலமுறை ஏசினார். இத்தனைக்கும் அவர் மிக மென்மையான இயக்குநர் என்றுதான் பெயரெடுத்திருக்கிறார்.

“அதேசமயம் தன் மகளுக்காக அவர் சலுகை அளித்தார்; எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார் எனும் பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். எனவேதான் நான் தெலுங்குத் திரையுலகுக்குச் சென்றேன்.

“காரணம், தமிழ், மலையாளத் திரையுலகைப் போல் அவர் தெலுங்கில் பெயரெடுக்கவில்லை. அது எனக்கு வசதியாகிப் போனது,” என்று சொல்லும் கல்யாணி, அடுத்து சிம்பு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மிக அருமையான ஒரு கதையில் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகச் சொல்கிறார் கல்யாணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!