புதுப்படம் ஒன்றில் சோதிடராக நடிக்க உள்ளார் ரெஜினா.
இது போன்ற சுவாரசியமான கதாபாத்திரங்களுக்காகவே இத்தனை நாட்களாக காத்துக் கிடந்ததாகச் சொல்கிறார்.
‘திருடன் போலிஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படத்தில் ரெஜினாவும் அக்ஷரா கவுடாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சோதிடர் வேடம் என்று தெரிந்ததுமே உற்சாகமாகி விட்டதாகச் சொல்கிறார் ரெஜினா. கார்த்திக் ராஜு கதையை விவரித்தபோது, அது தனக்காகவே செதுக்கப்பட்டது போன்று உணர்ந்தாராம்.
“கார்த்திக் என்னைச் சந்தித்து கதை சொன்னபோது உண்மையாகவே அது எனக்கான கதை என்று மனதிற்பட்டது. அவர் ஒவ்வொரு காட்சியாக சொல்லிக்கொண்டே போனார்.
“எந்த இடத்திலும் நான் குறுக்கிடவே இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் என்னை மிக எளிதாகப் பொருத்திக்கொள்ள முடிந்தது.
“நிச்சயமாக இது வித்தியாசமான கதைதான். எப்படி காட்சிகளை விவரித்தாரோ அதே போன்ற தனித்தன்மையுடன் அவற்றைப் படமாக்குவார் என்று நம்புகிறேன்,” என்கிறார் ரெஜினா.
இது பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி உருவாகும் படமாம். காதல், நகைச்சுவை, சோகம் என எல்லாம் இருக்குமாம்.
“இந்தப் படக்குழுவினரை நம்பி ரசிகர்கள் தைரியமாக திரையரங்குக்கு வரலாம்,” என்கிறார் ரெஜினா.