விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘தமிழரசன்’ அனைவருக்கும் பிடித்தமான படைப்பாக இருக்கும் என்கிறார் இயக்குநர் பாபு யோகேஸ்வரன்.
இந்தப் படம் வெளியான பிறகு விஜய் ஆண்டனியின் நடிப்புக் குறித்துப் பரவலாகப் பேசப்படும் என்றும் கூறுகிறார்.
எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க வணிக ரீதியிலான அம்சங்களைக் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
“இந்தப் படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அவ்வாறே உருவாகி இருக்கிறது. படம் சிறப்பாக வளர்ந்ததற்கு விஜய் ஆண்டனியும் தயாரிப்பாளரும்தான் முக்கியக் காரணம் என்பேன். ஏனெனில் ஓர் இயக்குநராக நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தனர்.
“நாம் அனைவருமே இரண்டு ராஜாக்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறோம். இளையராஜாவும் பாரதிராஜாவும்தான் நான் குறிப்பிடும் அந்த இரு ராஜாக்கள்.
“இளையராஜாவின் இசை இந்தப் படத்துக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. ஒரு வணிகப் படத்துக்கு எத்தகைய இசை தேவையோ அதைக் குறைவின்றி கொடுத்திருக்கிறார். இது வணிகப் படம்தான் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதேசமயம் இது அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்,” என்கிறார் பாபு யோகேஸ்வரன்.