புத்தாண்டு அமர்க்களமாகத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார் மெஹ்ரின் பிர்சாடா. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’ ஆகிய இரு படங்களில் ரசிகர்கள் இவரைத் தரிசித்திருக்க முடியும்.
‘பட்டாஸ்’ படத்தில் இவர்தான் தனுசுக்கு ஜோடி. மூன்று படங்களில் நடித்துள்ளபோதிலும் தமிழில் ஒருசில வார்த்தைகள் தான் தெரியும் என்கிறார் மெஹ்ரின்.
“எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன். சாப்பிட்டீங்களா? என்று தனக்குத் தெரிந்த வார்த்தைகளை மெஹ்ரின் வரிசையாகச் சொல்லும்போது அவரது கொஞ்சும் தமிழ் உச்சரிப்பு நம்மை கலகலக்க வைக்கிறது.
“தெலுங்கிலும் எனக்கு ஒருசில வார்த்தைகள்தான் தெரியும் என்றாலும் எப்படியோ சமாளித்து விடுகிறேன். கோலிவுட்டில் தரமான படைப்புகளில் இடம்பெற வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால கனவு.
“‘நோட்டா’வுக்குப் பிறகு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் திறமைக்கேற்ற வாய்ப்புகள் தேடிவரும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வகையில் ‘பட்டாஸ்’ வாய்ப்பு கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்,” என்று சொல்லும் மெஹ்ரின், தனுஷ் நடித்த ‘மாரி-2’ படத்தை அண்மையில்தான் பார்த்தாராம். அதில் இடம்பெற்றுள்ள ரவுடிபேபி பாடல் இவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம்.
“மாரி’யில் அடிக்கடி ‘செஞ்சிருவேன்’ என்று சொல்வார் தனுஷ். அதேபோல் ‘பட்டாஸ்’ படத்தில் அவரிடம் செய்து காட்டுவேன். இந்தக் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும். நான் ‘செஞ்சுருவேன்’ என்று சொல்லும்போது ‘அது அப்படி இல்லம்மா இப்படி’ என்று பதிலுக்குக் கலாட்டா செய்வார் தனுஷ்,” என்று சொல்லிச் சிரிக்கும் மெஹ்ரின், கனடாவில் பிறந்து வளர்ந்தவர்.
இவரது குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாதாம். கனடாவில் இருந்தபோது விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து சில அழகிப் போட்டிகளில் பங்கேற்று சில பட்டங்களும் பெற்றுள்ளார். அந்தச் சமயத்தில்தான் தெலுங்குப் பட வாய்ப்புத் தேடி வந்துள்ளது.
“தெலுங்கில் எனது முதல் படமான ‘கிருஷ்ணகாடி வீர பிரேம கதா’ பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு சுசீந்திரன் சார் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானேன்,” என்று சொல்லும் மெஹ்ரின், தமிழிலும் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இவரது பெற்றோருக்கு தென்னிந்திய மொழிகள் எதுவும் தெரியாதாம். இருப்பினும் மகள் நடித்த படங்கள் வெளியாகும்போது தவறாமல் திரையரங்கம் சென்று பார்க்கிறார்கள்.
ஓய்வுநேரங்களில் புத்தகங்கள் படிப்பதுதான் மெஹ்ரின் பொழுதுபோக்கு. யாரைச் சந்தித்தாலும் புத்தகங்களைத் தான் பரிசாக அளிக்கிறார். தனக்கும் பிறர் புத்தகங்களை பரிசாகத் தந்தால் அதை வரவேற்பதாகச் சொல்கிறார் இந்த புது நாயகி.