சுடச் சுடச் செய்திகள்

"காதலிப்பதால் மகிழ்ச்சி, நிம்மதி"

தமிழ்ச்சினிமாவில் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் எதிர்மறை கருத்துக்கள் அதிகமாக வருவதாகக் கவலை தெரிவித்தார்.

“உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை.., பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? 

“ரசிகர்கள் என் மீது காட்டி வரும் அன்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதைவிட வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்? ரசிகர்களின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது,” என்றார் நயன்தாரா.

அண்மைக்காலமாக தாம் விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிடுவது குறித்து சிலர் விசாரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய தருணங்களில் தாம் மகிழ்ச்சியை உணர்ந்ததாகக் கூறினார்.

“மகிழ்ச்சியாக இருக்கும்போது அத்தகைய படங்களை எடுக்கிறேன். அவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

“உண்மையாகவே மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோ‌ஷத்தைவிட இப்போது நிம்மதியை உணர்கிறேன். 

“இத்தகைய நிம்மதியானது யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். உங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, எதிர்காலத்தில் வாழ்க்கைத் துணையாகப் போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம்,” என்றார் நயன்தாரா.

அவர் தனது காதலர் விக்னேஷ் சிவன் குறித்தே இவ்வாறு குறிப்பிட்டார். இதைக் கேட்ட ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். மேலும் பேசிய அவர், புத்தாண்டு சபதம் என்று எதுவும் எடுக்கவில்லை என்றார்.

“ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும். 

“நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி. எப்போதுமே ஒரு படம் வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த வெற்றியை மனம் எதிர்பார்க்கும்.

“எனக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை,” என்றார் நயன்தாரா.

தற்போது ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு மத்தியில் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அதிலும், தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதியிலோ திருமண நிகழ்வை வைத்துக் கொள்வதில் நயன்தாராவுக்கு விருப்பம் இல்லையாம். ஏதேனும் வெளிநாட்டில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை நயன்தாராவுக்கு நெருக்கமான வெளிநாட்டு நண்பர்கள் சிலர் செய்து வருவதாகத் தகவல். எனினும் இந்தத் தகவலை நயன்தாரா தரப்பு இதுவரை உறுதி செய்யவில்லை.
“நயன்தாரா ரசிகர்களை வெகுவாக மதிப்பவர். மேலும் தென்னிந்திய திரைக் கலைஞர்கள் பலரும் அவருக்கு நெருக்கமானவர்கள். 

“எனவே அவர்கள் திருமண நிகழ்வில் பங்கேற்க வசதியாக உள்நாட்டில்தான் திருமண வைபவத்தை நடத்துவார்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon