'குடும்பம், வாழ்க்கை சார்ந்து உருவான படம்'

2 mins read
531206ec-a333-46a4-82ff-a599f3419ca0
சின்னத்திரையில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆர்.கோபி இயக்கத்தில் உருவாகிறது 'நானும் சிங்கிள்தான்'. தினேஷ்,  தீப்தி ஸடி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படம்: ஊடகம் -

சின்னத்திரையில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆர்.கோபி இயக்கத்தில் உருவாகிறது 'நானும் சிங்கிள்தான்'. தினேஷ், தீப்தி ஸடி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

படத்தின் முக்கிய காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. கோபி ஏற்கெனவே 'வெர்ஜின் பசங்க எனும் இணையத் தொடர் மூலம் திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அந்த இணையத் தொடர்தான் இவருக்கு திரைப்பட வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

"எப்படியாவது ஒரு காதலியை தேடிப்பிடித்துவிட வேண்டும் என்று விரும்பும் இளைஞனுக்கும் வாழ்க்கையில் எப்போதுமே தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தால் எப்படி இருக்கும். அதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

"ஏதோ சாதாரண கதைபோல் தோன்றும். ஆனால் முழுக்க முழுக்க நகைச்சுவையும் இதர பொழுது போக்கு அம்சங்களும் கொண்ட படமாக உருவாகிறது," என்கிறார் கோபி.

அது மட்டுமல்ல, இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாம். மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் தன்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஆனந்த்ராஜ், ரகுமான் இசைக்குழுவைச் சேர்ந்த மஞ்சுனாத் ஆகிய இருவரையும் இந்தப் படத்தில் இணைத்துக் கொண்டுள்ளார் கோபி. மஞ்சுனாத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

"முதலில் நான் எழுத நினைத்த கதை முற்றிலும் வேறு மாதிரியானது. இயக்குநர் விக்னேஷ் சிவன் போன்ற ஒரு இளைஞன், நயன்தாரா மாதிரி ஒரு பெண்ணை விரும்புவதாக எழுதியிருந்தேன். ஆனால் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டபோது, எல்லோருமே சொல்லி வைத்தது போல், என்னுடைய இணையத் தொடர் மாதிரியான கதைதான் வேண்டும் என்றனர். அதன் பிறகே கதையை மாற்றினேன்," என்கிறார் கோபி.

எப்படி இருந்தது லண்டன்?

"எதற்காக லண்டன் சென்றோம் என்பதை படம் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். நாங்கள் அங்கு சென்ற நேரம் மிகவும் நல்ல நேரம். காரணம், இரவு ஒன்பது மணி வரை பகல் பொழுதாகவே இருந்தது. அதனால் சலிப்பே ஏற்படாமல் படப்பிடிப்பை நடத்தினோம்.

"தினேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட எல்லோருமே அடுத்தடுத்த காட்சிகளைப் படமாக்கும் பகுதிகளுக்கு எங்களுடன் நடந்தே வந்தனர். சின்னச் சின்ன வேலைகளையும் பகிர்ந்துகொண்டனர்.

"இந்தக் கதையை நிறைய நாயகர்களிடம் சொல்லி இருக்கிறேன். சிலர் உள்வாங்கிக் கொள்ள சிரமப்பட்டனர். ஆனால் தினேஷ் எளிதில் புரிந்துகொண்டார்.

"அதுமட்டுமல்ல, சின்ன விஷயங்களைக் கூட அழகாக மெருகேற்றுகிறார். மிகவும் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்," என்று பாராட்டுகிறார் கோபி.

கதைப்படி இதில் பச்சை குத்தும் நிபுணராக நடித்துள்ளாராம் தினேஷ். நாயகி தீப்தி மும்பையைச் சேர்ந்தவர்.

சில நாயகிகள் படத்தின் கதையைக் கேட்டு தயங்கியபோது, தீப்தி எந்தவித தயக்கமும் இன்றி நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity