முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே தமது நீண்ட நாள் ஆசை என்கிறார் சுனைனா.
கதைக்குத் தேவைப்பட்டால் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எவ்வளவு குழந்தைகளுக்கு வேண்டுமானாலும் தாயாக நடிக்கத் தயார் என்று சொல்லிச் சிரிக்கிறார்.
'காதலில் விழுந்தேன்' மீரா, 'நீர்ப்பறவை' எஸ்தர் என்று அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல நடிகை எனப் பெயரெடுத்துள்ளார் சுனைனா.
இவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியில் வரவேற்கப்பட்டாலும், இவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார் சுனைனா.
இந்நிலையில், அண்மையில் வெளியான 'சில்லுக்கருப்பட்டி'யில் அமுதினி எனும் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை மீண்டும் கவர்ந்துள்ளார் சுனைனா.
கதைப்படி இவர் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. இளம் வயதில் அக்கா வேடத்தில் நடிக்கவும், இரண்டாம் நாயகியாக நடிக்கவும் கூட பலர் தயங்கும் நிலையில், எப்படி இதற்கு ஒப்புக் கொண்டீர்கள்? என்று கேட்டால், கதையின் தேவையை நன்கு புரிந்துகொண்டதால் தயக்கமின்றி நடித்ததாகச் சொல்கிறார்.
"இயக்குநர் ஹலீதா என்னிடம் கதையை விவரித்தபோது உண்மையாக நானும் அதிர்ச்சி அடைந்தேன்.
"அதனால் முழுக் கதையையும் காட்சிகளையும் விலாவாரியாக அச்சிட்டுக் கொடுத்தார். அதைப் படித்தபோது என்னையும் அறியாமல் சிரித்துக் கொண்டே இருந்தேன். அதனால்தான் எனது கதாபாத்திரத்தை நன்கு அனுபவித்து நடிக்க முடிந்தது," என்று சொல்லும் சுனைனா, இதுவரை கிருத்திகா உதயநிதி, நந்தினி ஜே.எஸ், ஹலீதா ஷமீம் என மூன்று பெண் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
மூவருமே திறமைசாலிகள் என்கிறார். பணியில் மிகுந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு, பிரச்சினைகளுக்குப் பொறுமையாக தீர்வு காண்பது, படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் நன்றாகக் கவனித்துக் கொள்வது என்று மூவரிடமும் பல நல்ல பண்புகள் இருப்பதாகவும் பாராட்டுகிறார். தெலுங்கில் தற்போது இணையத் தொடர்களிலும் நடிக்கிறார் சுனைனா. வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டிருந்தால் தயக்கமின்றி நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.
அடுத்து..?
'தெறி', 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் சிறப்புத் தோற்றத்தில் வந்து போனேன். அவை எல்லாம் எனது திரைப் பயணத்தின் மறக்க முடியாத இனிய தருணங்கள்.
"குறிப்பாக 'தெறி'யில் நான் வந்து போகும் பகுதி ரொம்ப கலகலப்பாக இருந்ததாகப் பலரும் கூறினர். அதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று படம் முழுவதும், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
"அப்படியொரு கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன். அதன் மூலம் எனது நடிப்பின் ஆழத்தை ரசிகர்களால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும்," என்று சொல்லும் சுனைனாவுக்கு, தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமைவதில்லை எனும் மனக்குறை உள்ளது.
எனினும் அண்மைய சில மாதங்களில் பல இளம், புது இயக்குநர்கள் தேடி வந்து கதை சொல்கிறார்களாம். எனவே மிக விரைவில் தமது விருப்பம் நிறைவேறும் என நம்புகிறாராம்.
கொசுறு: சுனைனா சக நடிகரைக் காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என அவரே சொல்கிறார்.

