பொதுவாக நடிகைகளின் கண்களின் அழகை வைத்தே பெரிய இயக்குநர்கள் தங்கள் பட நாயகியாகத் தேர்வு செய்வார்கள் என்று கோடம்பாக்கத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.
இதை நடிகைகளும் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் முன்னணிக் கதாநாயகிகள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்? தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கண்களை எப்படிப் பராமரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
பத்து பக்கங்கள் கொண்ட வசனங்களை ஒரு சின்ன பார்வையே ரசிகர்களுக்கு சுலபமாகக் கடத்திவிடும் என்பதால், அந்தச் சக்தி்யை வீணடித்து விடக்கூடாது என்கிறார் நயன்தாரா. எனவே கண்கள் நமது தைரியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று தன் தோழிகளிடம் அடிக்கடி சொல்வாராம்.
"கண்களை அழகுபடுத்துவதில் தனக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டுள்ளார். அதை அவர் என்றுமே மீறியதில்லை. நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு. இவையே கண்களைப் பாதுகாக்கும் என்று சொல்வார்," என்கின்றன நயனின் நட்பு வட்டாரங்கள்.
இளம் நாயகி ராஷி கண்ணா திரையுலகில் நுழைவதற்கு முன்பு தன் கண்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை என்கி்றார். ஆனால் நடிக்க வந்த பிறகு கண்களைப் பராமரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாகச் சொல்கிறார்.
''படப்பிடிப்பின்போது சூரிய வெளிச்சம், பெரிய விளக்குகளின் ஒளி, புழுதி பறக்கும் பகுதிகளுக்குச் சென்று பல மணி நேரம் நடிப்பது என்பதெல்லாம் தவிர்க்க முடியாதவை.
"எனவே நமது கண்களையும் சருமத்தையும் கூடுதல் சிரத்தை எடுத்து நாமே நல்லவிதமாகப் பராமரிக்க வேண்டும். கண்கள் மட்டுமல்ல, அவற்றின் கீழே கருமை படராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். இதன் மூலம் நம் அழகு கூடுதலாகும்," என்கிறார் ராஷி கண்ணா.
இரவு சரியான நேரத்துக்கு உறங்கச் செல்வதும், அதிகாலை எழுவதும்தான் கண்களைப் பாதுகாக்கும் என்பது டாப்சியில் அறிவுறுத்தலாக உள்ளது.
இதன் காரணமாகத்தான் இரவு நேர படப்பிடிப்புகளை தாம் அறவே தவிர்ப்பதாகச் சொல்கிறார்.
"ஒருவேளை தவிர்க்க இயலாத காரணங்களால் இரவு படப்பிடிப்பு இருக்குமாயின், அதுகுறித்து ஒரு மாதத்துக்கு முன்பே விவரம் தெரிவிக்கச் சொல்வேன். பிறகு எனக்கு நானே, 'இரவு படப்பிடிப்பு உள்ளது' சொல்லிச் சொல்லி அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வேன்.
"மற்றபடி கண்களுக்கென தனியாக ஒப்பனை ஏதும் செய்வதில்லை. நிஜத்தில் எப்படியோ, அப்படித்தான் திரையிலும் வருகிறேன்," என்கிறார் டாப்சி.
திருமணத்திற்குப் பிறகும் கண்களாலேயே புன்னகைப்பவர் சமந்தா என்று கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்வர். அவரைப் பொறுத்தவரை ஆரோக்கியமான உணவுதான் கண்களுக்கு முக்கியம் என்கி்றார்.
"கண்கள் பளிச்சென்று இருக்க நாம் சற்றே மெனக்கெட வேண்டும். நிறைய தண்ணீர், பழரசங்கள் பருகுவேன். புருவங்களுக்கு 'ஐ லைனர்' பயன்படுத்தப் பிடிக்கும். வெளியே சென்றால் குளிர்கண்ணாடிகளை மறக்க மாட்டேன்," என்கிறார் சமந்தா.
கண்கள் பராமரிப்பில் நான் கவனமாக இருப்பேன். ரசாயனங்கள் எதையும் அழகுக்காகப் பயன்படுத்துவதில்லை என்கிறார் ரகுல் பிரீத் சிங். பப்பாளி அதிகம் உட்கொள்வது நல்லதாம். படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவெளிகளின் போது சற்றே கண்களை மூடிக் கொள்வாராம். இதனால் மீண்டும் கண் திறக்கும் போது புத்துணர்ச்சி கிடைத்தது போல் இருக்கும் என்கிறார்.

