விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ள விஜய் சேதுபதி, இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது நண்பனாக வருகிறாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதி நீண்ட தலைமுடி, முரட்டு மீசையுடன் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து படக்குழுவினர் எந்த தகவலையும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. புதிய தோற்றம் பிரமாதமாக இருப்பதாக விஜய் சேதுபதியை வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். விஜய் சேதுபதி எந்த ஒரு கௌரவமும் பார்க்காமல் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 'விக்ரம் வேதா', 'பேட்ட' படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். 'சீதக்காதி'யில் வயதானவராக வந்தார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடித்திருந்தார். தற்போது 'கடைசி விவசாயி', 'லாபம்' படங்களில் நடித்துள்ளார். இவை விரைவில் திரைக்கு வரவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

