தமிழில் ரஜினிக்கு இணையாக தானும் ஒரு உச்ச நடிகர் என்று விஜய் இனிமேல் தைரியமாகச் சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை கால் நூற்றாண்டுக்கும் மேலாக உச்ச நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவருக்கான சம்பளம் படத்துக்குப் படம் அதிகரித்தபடியே இருக்கிறது.
கடைசியாக அவர் நடித்த 'தர்பார்' படத்துக்காக அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு அடுத்த படியாக 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் பட்டியலில் விஜய்யும் இணைந்திருக்கிறாராம்.
அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார்.
எப்போதுமே தான் புதிதாக நடிக்கும் படத்தின் பணிகள் பாதி முடிவடைந்த நிலையில், அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பது என்பதைத் தீர்மானிப்பது விஜய்யின் வழக்கம்.
அந்த வகையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்காக விஜய்க்கு அந்நிறுவனம் அவரது சம்பளத்தில் சரிபாதி தொகையை முன்பணமாக அளித்துள்ளதாம்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பிகில்' திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாகத் தகவல். இதையடுத்தே அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.
கடந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூல் கண்டது 'பிகில்'தான். அந்த வகையில் ரஜினியின் 'பேட்ட'யை முறியடித்துள்ளார் விஜய். இதற்கிடையே ரஜினிகாந்தின் 'தர்பார்' படமும் வசூலில் அசத்தி வருவதாகத் தகவல்.
உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது 'தர்பார்'.
வசூல் அளவில் ரஜினியின் முந்தைய படங்களை இது முந்திவிடும் என்கிறார்கள்.
முதல் நாள் தமிழகத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள 'தர்பார்' தயாரிப்புத் தரப்புக்குப் பெரும் லாபத்தை அளிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
அதேபோல் தெலுங்கானா, ஆந்திராவில் 7.5 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாம். எனவே 10 நாட்களில் முதலீட்டைக் கடந்து படம் பெரும் தொகையை வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே விஜய் நூறு கோடி ரூபாய் சம்பளம் என்ற உயரத்தை இன்னும் எட்டிப் பிடிக்கவில்லை என்று ஒருதரப்பு கூறி வருகிறது.
"விஜய் இப்போதும் 70 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகிறார். ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்த வாய்ப்பு இல்லை. அதேபோல் 'தர்பார்' படத்துக்காக ரஜினி பெற்ற தொகை 90 கோடி ரூபாய்தான்," என்றும் அந்தத் தரப்பு கூறுகிறது.
விஜய், வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் பெரும் பொருட்செலவில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

