'மாநாடு' படத்தில் மாறுபட்ட கோணத்தில் சிம்பு

‘மாநாடு’ திரைப்படம் சிம்பு ரசிகர்களை நூறு விழுக்காடு திருப்திப்படுத்தும் வகையில் உருவாகி வருவதாகச் சொல்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. 

மிகவும் சவாலான ஒரு கதையைக் கையாள இருப்பதாகவும் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புதுமையான கதைக்களமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். 

எதிர்வரும் பிப்ரவரியில் ‘மாநாடு’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

படத்திற்கு யார் வில்லன் என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லையாம். இது தொடர்பாக முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல். இந்நிலையில், சினிமாவுக்காக தான் இதுவரை எழுதிய கதைகளில் மிகவும் சவாலான கதை‘மாநாடு’தான் என்கிறார் வெங்கட் பிரபு.

“இந்தப் படத்தைத் தொடங்கியபோதே சில பிரச்சினைகளை எதிர்கொண்டோம். நாங்கள் எதிர்பாராத வகையில் சில திருப்பங்கள் நிகழ்ந்தன. இதனால் பலவிதமான செய்திகள் பரவின. படத்தைக் கைவிட்டதாகவும்கூட கூறப்பட்டது. ஆனால், இந்தக் கதை எங்கள் அனைவரையும் மீண்டும் இணைத்துள்ளது. அதனால் மகிழ்ச்சியாக உணர்கிறோம். படம் திட்டமிட்டபடி வெளியீடு காணும்,” என்கிறார் வெங்கட் பிரபு.

பொதுவாக ஒரு படத்தின் நாயகனை வித்தியாசமான கோணத்தில் காட்டப்போவதாக இயக்குநர்கள் சொல்வது வழக்கமான ஒன்றுதான். வெங்கட் பிரபுவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

‘மாநாடு’ படத்தில் வித்தியாசமான ஒரு கதைக் களத்தில் முற்றிலும் மாறுபட்ட சிம்புவைக்  காணமுடியும் என்கிறார்.

“அப்படி என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழக்கூடும். சிம்புவக்கு என்று சில தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அவர் திரையில் தோன்றினால் அவற்றையெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அவர் வழக்கமாகச் செய்யக்கூடிய விஷயங்கள் எதுவுமே இந்தப் படத்தில் இருக்கக்கூடாது என முடிவு செய்துள்ளேன். 

“இதற்கு முன்பு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கௌதம் மேனன் தனக்கே உரிய பாணியில் சிம்புவை வித்தியாசமாகக் காட்டினார். அது மக்களுக்கும் பிடித்திருந்தது,” என்று சுட்டிக்காட்டுகிறார் வெங்கட்பிரபு.

கௌதம் மேனனைப் பின்பற்றி இவரும் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான சிம்புவைத் திரையில் காட்டப் போகிறாராம். அது சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் என நம்புகிறாராம்.

“அதுமட்டுமல்ல! இது வித்தியாசமான கதைக்களம் என்று முன்பே கூறிவிட்டேன். இந்த வார்த்தைகளை நியாயப்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாகும். திரையில் காணும்போது நான் சொல்வது எந்தளவு உண்மை என்பது உங்களுக்கும் புரியும். 

“சிம்பு மிகுந்த திறமைசாலி. அவரைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது இயக்குநரின் பொறுப்பு. அதைக் கச்சிதமாகச் செய்யும் பட்சத்தில் ஒரு படைப்பு நிச்சயம் வெற்றிகரமாக உருவாகும்,” என்கிறார் வெங்கட்பிரபு.

இவர் சொன்ன கதையைக் கேட்ட சிம்பு, மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றிப் படத்தைத் தன் ரசிகர்களுக்குத் தர முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினாராம்.

சிம்புவுக்காக கதை எழுதாமல், கதைக்கு ஏற்ப சிம்புவை நடிக்க வைப்பதுதான் வெங்கட் பிரபுவின் திட்டம் என்கிறது அவரது தரப்பு.

மாநாடு படப்பிடிப்பை வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அநேகமாக பிப்ரவரியில் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்கும் மாநாடு படக் குழு, மார்ச் மாதம் வெளிநாடு பறக்கும் என எதிர்பார்க்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் அபிமான நாயகனின் வெற்றிப் படத்துக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள்.