‘யாரையும் தாக்குவது எங்கள் நோக்கமல்ல’

“குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்குவது எங்கள் நோக்கமல்ல. நல்ல படைப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்,” என்கிறார் இயக்குநர் மோகன்.ஜி.

இவர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’யை இயக்கியவர். தற்போது ‘திரௌபதி’ என்ற தலைப்பில் புதுப்படம் இயக்கியுள்ளார். 

இதில் நடிகர் ரிச்சர்டு, ஷீலா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கூட்டுநிதி (crowd funding) முறையில் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். 

இந்நிலையில், சாதியக் கண்ணோட்டத்துடன் இப்படத்தை உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரைத் தாக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. 

மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் இப்படம் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் புகார் எழுப்பியுள்ளனர். 

ஆனால், ‘திரௌபதி’க்கு ஒருபக்கம் எதிர்ப்பு இருந்தாலும் மூன்று பக்கம் வரவேற்பும் இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் மோகன்.ஜி. அந்த ஒரு பக்க எதிர்ப்பும் படம் வெளியான பிறகு மறைந்து போகும் என்கிறார். 

சாதியின் பெயரால் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கசக்கத்தான் செய்யும் என்று குறிப்பிடுபவர், விழிப்புணர்வுக்கான களமாகவே இப்படத்தைப் பார்க்கவேண்டும் என்கிறார். 

சாதியின் பெயரால் தவறு செய்ய நினைப்பவர்களும், அதைத் தூண்டுவோரும் மனம் மாறினால் அதுவே தங்கள் முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றி என்றும் மோகன்.ஜி. கூறுகிறார்.

‘திரௌபதி’ என தலைப்புக்கான காரணம் என்ன?

இப்படத்தில் திரௌபதி என்கிற பெண் எடுக்கும் சபதம்தான் கதையின் மையப் புள்ளி. என்னுடைய குலதெய்வத்தின் பெயர் திரௌபதி. அதனால் இந்தத் தலைப்பை தேர்வு செய்தேன். திரௌபதியாக ஷீலா நடித்திருக்கிறார். 

படம் எப்போது வெளியீடு?

“இப்படம் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியே பெரிய அளவில் கவனத்தை பெற்றிருப்பதால் பல்வேறு நிறுவனங்கள் வாங்கி வெளியிட முன்வந்துள்ளன. இதுவரை எவரிடமும் விற்பனை உரிமையை கொடுக்கவில்லை.

“பிப்ரவரியில் வெளியிடத் திட்டம். எந்த நிறுவனம் வழியே வெளியீடு செய்ய உள்ளோம் என்பது விரைவில் தெரியவரும்.

‘ஆணவக் கொலையை ஆதரிக்கும் விதமாக இப்படம் உள்ளது’ என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதே?

“இது பெண் குழந்தைகளைப் பெற்ற தகப்பன்களுக்கான படம். இப்படத்தை எதிர்க்கும் அவர்களி லும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் இருக்கலாம். இப்படம் வந்ததும் ‘இது நமக்கான படம்’ என அவர்கள் உணர்வார்கள்.

இங்கே அனைத்து சமூகத் திலும் தவறு செய்பவர்கள் இருக் கிறார்கள். அப்படி இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தாக்க வேண்டும் என்பது எப்படி என் நோக்கமாக இருக்கும்? தவறுசெய்த ஒரு சிலர், இப்படம் வெளியிடப்பட்டால் நாம் சிக்கிக்கொள்வோம் என கருதுகிறார்கள்,” என்கிறார் மோகன்.ஜி.