நித்யா மேனனின் புது அவதாரம்

இதுவரை நடிப்பில் மட்டுமே அசத்திக் கொண்டிருந்த நித்யா மேனன், தற்போது பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். 

மிக விரைவில் அவரது குரலில் ஒலிக்கும் பாடல்களுடன் இசைத் தொகுப்பு ஒன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் சிறு வயது முதலே பாடல்கள் பாடுவது தமக்குப் பிடிக்கும் என்றும், பாடகியாக வேண்டும் என்ற விருப்பம் தற்போது நிறைவேறி உள்ளது என்றும் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

தனது முதல் இசைத் தொகுப்பு விரைவில் வெளியாக இருப்பது மனதில் இனம் புரியாததோர் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், தொடர்ந்து பாட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் நித்யா தெரிவித்துள்ளார்.

“எனக்கு நான்கு மொழிகள் தெரியும். கேலிச்சித்திரங்களை  வெகுவாக ரசிப்பேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் எனும் ஆசை இருக்கிறது. 

“இதே போல் திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பதும் என் கனவு. நிச்சயம் ஒரு நாள் இயக்குநராக மாறுவேன்,” என்கிறார் நித்யா மேனன்.

இந்திய சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகனை மையமாக வைத்தே படங்கள் எடுக்கப்படுவதாக அலுத்துக் கொள்பவர், அத்தகைய படங்களில் நடிக்க தமக்கு விருப்பம் இல்லை என்கிறார்.

மாறாக புதிய கதைக்களமும், வித்தியாசமான அம்சங்கள் நிறைந்த கதைகளும் அமைந்தால் எது குறித்தும் யோசிக்காமல் நடிக்கத் தயார் என்கிறார்.

“சினிமாவில் கதாநாயகிகள் இரண்டு ஆடல் பாடல் காட்சிகளில் வந்து செல்லும் காலம் மலையேறிவிட்டது. ரசிகர்களே அந்த நடைமுறையை ஒதுக்கிவிட்டனர்.

“அப்படிப் படங்களில் நடித்திருந்தால் எண்ணிக்கை அதிகரித்திருக்குமே தவிர, மனத்திருப்தி இருந்திருக்காது.

“நடிகைகளுக்குப் பாலியல் தொல்லைகள் இருப்பதாக பேசுகின்றனர். எனது சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை,” என்கிறார் நித்யா.