‘நன்கு ஆராய்ந்து பார்த்து கதைகளைத் தேர்வு செய்கிறேன்’

குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதும், எரிச்சலடையாமல் பார்த்துக்கொள்வதும் பெரும் சவால் என்கிறார் நடிகர் மாதவன். 

‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ போன்ற கதைகளை எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ‘ராக்கெட்ரி’ படத்தை இயக்கி வருகிறார் மாதவன். இந்தாண்டு மத்தியில் அப்படம் வெளியாகுமாம்.

“தமிழ்ப் படங்களில் நடிப்பதை நான் குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. 

“என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்து அப்படிப்பட்ட கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன்,” என்கிறார் மாதவன். 

தரமான  படைப்புகளில் தனது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பது மட்டுமே தமது இலக்கு என்றும், அதனால் தான் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடிக்க வேண்டியுள்ளது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிலும் நேரடியாக ஒரு படத்தை இயக்கும் திட்டம் மாதவனிடம் உள்ளது. அதற்கான பணிகளை அவர் சத்தமின்றி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.