சுடச் சுடச் செய்திகள்

குருதியாட்டம்

‘8 தோட்டாக்கள்’ என்ற தரமான படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. ‘குருதியாட்டம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் முதன்முறையாக அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

அண்மையில் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியானது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.  முற்றிலும் மாறுபட்ட இரண்டு பேர் எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்கிறது. இருவரும் நட்பு பாராட்டத் துவங்குகிறார்கள். அதன்பிறகு இவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை விரிவாக அலசுகிறது இப்படம்.

“திவ்யதர்ஷினி என்ற சிறுமியைச் சந்தித்தவுடன் அவள் மீது அதர்வாவுக்கு இனம்புரியாத பாசம் ஏற்படுகிறது. அவளுக்காக எதையும் செய்யும் அளவுக்கு நெருக்கமாகி விடுகிறார். 

“இந்நிலையில்  திவ்யதர்ஷினி சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.  அவற்றிலிருந்து அந்தச் சிறுமியை மீட்க முயற்சி செய்கிறார் அதர்வா. இதனால் அவருக்கும் சில பிரச்சினைகள் உருவாகிறது. அவற்றிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. 

“இரு நபர்களுக்கு இடையேயுள்ள பாசப்பிணைப்பை விவரிக்கும் கதை என்றாலும் அதிரடிக்கும் பஞ்சமிருக்காது. அதர்வா வழக்கம்போல் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார்,” என்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.

படத்தில் ராதிகாவும் ராதாரவியும் முக்கியக் காதபாத்திரங்களில் நடித்துள்ளனராம்.  இப்படத்தின் படப்பிடிப்பு இடையில் பாதிக்கப்பட்டது. எனினும் அந்தத் தாமதத்தை மீறி தற்போது அனைத்துப் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருவதாக இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.

“இடையில் தாமதம் ஏற்பட்டது உண்மைதான். அதைப் பற்றிப் பேச இப்போது நேரமில்லை. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை மதுரையில்  நடத்த உள்ளோம். அதையடுத்து இதர வேலைகளை முடித்து குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவோம்,” என்கிறார் ஸ்ரீகணேஷ்.

இதற்கிடையே துபாய் விமான நிலையத்தில் ஒரு நாள் முழுவதும்  அதர்வா முடங்கிக் கிடந்த தகவல் வெளியாகி உள்ளது. 

கண்ணன் இயக்கத்தில் தலைப்பிடப்படாத இன்னொரு படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் முனைவர் பட்டம் பெற்ற இளைஞராக அதர்வாவும், பரதநாட்டியக் கலைஞராக அனுபமாவும் நடிக்கின்றனர். அசர்பைஜான் நாட்டில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக கடந்த சனிக்கிழமை துபாய் வழியாக அசர்பைஜான் செல்ல இருந்தார் அதர்வா. ஆனால் துபாய் சென்றடைந்த வேளையில் அங்கு பலத்த மழை பெய்துள்ளது. 

விமான நிலைய ஓடுபாதை வெள்ள நீரில் மூழ்கியதால் அங்கிருந்து அசர்பைஜான் செல்லும் விமானம் ரத்தாகி விட்டதாம். இதனால் ஒரு நாள் முழுவதையும் விமான நிலையத்திலேயே கழித்துள்ளார் அதர்வா. 

அதன்பிறகு மற்றொரு விமானம் மூலம் அசர்பைஜான் சென்றடைந்தாராம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon