அச்சு அசலாக எம்ஜிஆராக மாறிப்போன அரவிந்த்சாமி

தமிழ்த் திரையுலகில் ஆயிரம் பேர் பெயர் சொல்லும்படியாக வாழ்ந்தாலும் 100க்கு 99 பேர் மனதில் இன்றும் நீங்காது  நிலைத்து வாழ்ந்து வருகிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் எம்ஜிஆரின் தோற்றத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் தோற்றத்தைப் படக்குழுவினர் வெளியிட்டனர் 

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  வேகமாகப் பரவ, இதைக் கண்ட மக்கள் பலரும், “அட நம்ம அரவிந்த்சாமியா இது? பார்க்க அச்சுஅசலாக அப்படியே நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறாரே?” என்று வியப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இயக்குநர் ஏ.எல். விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார். 

இப்படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கணா ரனா வத்தும் மக்கள் திலகம் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாளான நேற்று அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை தெரிவிக்கும் அரவிந்த்சாமியின் சுவரொட்டி வெளியானது. 

 அத்துடன் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் டீஸர் ஒன்றும் வெளியானது.  அதில் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை பாடலுக்கு அரவிந்த்சாமி நடனமாடுகிறார். 

டீசர், சுவரொட்டியைப் பார்த்த பலரும் எம்ஜிஆரை பார்ப்பது போன்றே உள்ளதாக  பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

“அரவிந்த்சாமி எம்ஜிஆர் கதாபாத் திரத்துடன் இப்படி பொருந்திப் போவார்  என எதிர்பார்க்கவில்லை,” என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கங்கணாவின் கதா பாத்திரத்தை அறிமுகப்படுத்தி வெளியான டீசரைப் பார்த்து வாரக்கணக்கில் சினிமா ரசிகர்கள் கலாய்த்து சுடச்சுட கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 

“எந்தப் பக்கத்தில் இருந்து  பார்த்தாலும் கங்கணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும்    பொருத்தமாகவே இல்லை. எல்லாம் எட்டாம் பொருத்தமாகவே உள்ளது. காற்றடைத்த பலூன் போல் கங்கணா இருக்கிறார்,” என்று பலரும் கிண்டல் செய்தனர். 

‘தலைவி’ படத்தில் விஜய் செய்துள்ள ஒரே நல்ல காரியம், அரவிந்த்சாமியை எம்ஜிஆராகத்  தேர்வு செய்ததுதான் என்கின்றனர் திரையுலக  ரசிகர்கள். 

இப்படத்தில் மதுபாலா, பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

கங்கணா ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகிறது.

இந்திப் பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கணா பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்தியிலும் ‘தலைவி’ பெயரையே வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சில காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்த அரவிந்தசாமி தற்போது மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.