சுடச் சுடச் செய்திகள்

மெஹ்ரின் பிர்சாடா: விரைவில் தமிழில் பேசுவேன்

தெலுங்குத் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து முத்திரை பதித்துள்ள மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் மீண்டும் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்துள்ளார். 

இந்தப் ‘பட்டாஸ்’ படத்திற்கு முன்பு இவர் நடித்திருந்த ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ படத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், ‘பட்டாஸ்’  பட வாய்ப்பு குறித்து அவர் திரைச்செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். 

“தமிழில் எனக்கு ஒரு நல்ல துவக்கமாக பட்டாஸ் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு ஏற்ற பாத்திரம். கதையைக் கேட்டதுமே பிடித்துவிட்டது. 

“நீண்ட நாள் இந்த வாய்ப்புக்காகக்  காத்திருந்தேன். அந்த காத்திருப்புக்கு  இப்போது கைமேல் நல்ல பலன் கிடைத்துள்ளது. 

“இந்த படவாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம் என்றுதான் சொல்வேன்.

“இப்படத்தில் தனுஷ், சிநேகாவுடன்  நடித்தது மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. தனுஷிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நல்ல உழைப்பாளி. சினிமாவை அதிகமாகவே நேசிக்கிறார். 

“இயக்குநர் துரை செந்தில்குமார், தயாரிப்பாளர் தியாகராஜன் என படக்குழுவினர் அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘பட்டாஸ்’ இருக்கும்.

“இந்தப் படம் அடிமுறை என்ற தற்காப்புக் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 

“சிநேகா அடிமுறையைப் பயின்றார். எனக்கு அதுபோன்ற காட்சிகள் இல்லாததால் அதை நான் கற்கவில்லை. படத்தில் அடிமுறை குறித்து நல்ல கருத்து இடம்பெற்று உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அதை நான் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை.

“இப்போதுதான் தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்.

“எனக்குப் பிடித்த நடிகை என பல பேர் உள்ளனர். இருப்பினும் இவர்களுள் நயன்தாராவை எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும்.

“பட்டாஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து புதிய படங்களை ஒப்புக்கொள்வதற்கு முடிவு செய்துள்ளேன். வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க உள்ளேன். 

“தெலுங்கில் ஆக அதிகமாக 16 படங்களில் நடித்துள்ளேன். பஞ்சாபி, ஹிந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளேன்.

“இப்போதைக்கு நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டிவருகிறேன். நல்ல நடிகை என பெயர் எடுக்கவேண்டும். மற்ற எதிலும் என் கவனத்தை  துளியும் சிதறவிட விரும்பவில்லை.

“தமிழ் ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நிறைய தமிழ் படங்களில் நடித்து, அவர்களின் அன்புக்குப் பாத்திரமாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை.

“பொங்கலன்று தனுஷ், அவரது குடும்பத்தினர், ரசிகர்களுடன் சேர்ந்து  திரையரங்கில் ‘பட்டாஸ்’ படம் பார்த்து வந்தேன். இது நல்ல ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது,” என்கிறார் மெஹ்ரின் கவுர் பிர்சாடா.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon