'சபதம் எடுக்கும் பழக்கமில்லை'

'சபதம் எடுக்கும் பழக்கமில்லை'

2 mins read
02b87ab9-99e1-4e34-ade8-4c1499310306
ஒரு நடிகையாக வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்களில் நடிக்க ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லும் ரம்யா, படம்: ஊடகம் -

கடந்த இரு வாரங்களாக ரம்யாவைப் பார்க்கும் பலரும் புத்தாண்டுக்கு என்ன சபதம் என்று கேட்கிறார்களாம். புத்தாண்டுக்குச் சபதம் எடுக்கும் பழக்கமெல்லாம் தமக்கு இல்லை என்பவர், சில சமயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப சபதம் எடுக்க வாய்ப்புண்டு என்கிறார்.

அதேபோல் புத்தாண்டில் இன்ன நடிகருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் தமக்கு இல்லை என்கிறார் ரம்யா. நல்ல படங்கள் அமைய வேண்டும் என்பது மட்டுமே இவரது எதிர்பார்ப்பாம்.

"நான் உண்மையைத்தான் சொல்கிறேன். இவருடன் நடிக்கவேண்டும்; அவருடன் முதலில் நடித்துவிட வேண்டும் எனும் எதிர்பார்ப்பெல்லாம் எனக்கில்லை. நல்ல படங்களை மட்டுமே எதிர்நோக்குகிறேன். அந்த வகையில் இந்தப் புத்தாண்டு முழுவதும் பரபரப்பாக இயங்கவேண்டும் என விரும்புகிறேன்," என்று சொல்லும் ரம்யா பாண்டியன், அடுத்து '2டி' நிறுவனத்துக்காக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

படம் குறித்துக் கூடுதல் தகவல்கள் சொல்ல தமக்கு அனுமதி இல்லை என்கிறார். மேலும் இணையத் தொடர் ஒன்றிலும் நடிப்பதாகச் சொல்கிறார்.

ஒரு நடிகையாக வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்களில் நடிக்க ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லும் ரம்யா, திகில் படங்களைப் பார்க்கும்போது ஒரு நொடி கூட கண்களைத் திரையை விட்டு அகற்ற மாட்டாராம்.

"விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்கவும் குறிப்பாக விளையாட்டு வீராங்கனையாக நடிக்கவும் விரும்புகிறேன். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் 'மேரிகோம்', 'டங்கல்' மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறேன்," என்று சொல்பவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிடுவாராம்.

பிற மொழிப் படங்களைவிட தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகச் சொல்பவர், நடிக்கத் தொடங்கியது முதலே சவாலான கதாபாத்திரங்களை ஏற்கத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார். அதேசமயம் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் ஏற்பாராம்.

"பொதுவாக நான் எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை. ஆனால், சில விஷயங்கள் என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடக்கின்றன. அதனால் கிடைக்கும் வெற்றிகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன.

"என்னைப் பொறுத்தவரை காசு, பணம், செல்வாக்கு, புகழ் ஆகியவற்றைவிட மனநிறைவும் நிம்மதியும்தான் முக்கியம் என்பேன். அதனால்தான் அதிக வாய்ப்புகளைத் தேடி அலைவதில்லை. மாறாக, சில படங்களில் நடித்தாலும் தரமான நடிகை எனப் பெயர் வாங்கினால் அதுவே போதும் என இருந்து விடுகிறேன்," என்கிறார் ரம்யா.