சுடச் சுடச் செய்திகள்

‘கதை பிடித்தால் நடிப்பேன்’

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கவேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் அமலாபால். அதற்காக எந்தளவு வேண்டுமானாலும் மெனக்கெடத் தயார் என்றும் சொல்கிறார்.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘அதோ அந்தப் பறவை போல’. இது ‘கிராமகா’ என்ற தற்காப்புக் கலையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம். 

இந்தப் படத்தில் நடித்தது பெரும் மனதிருப்தியைக் கொடுத்ததாகவும் இப்படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் அமலா. 

‘அதோ அந்தப் பறவை போல’ படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது படத்தின் கதையைச் சுருக்கமாக விவரித்தார் அமலா. 

இளம்பெண் ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல் காட்டில் சிக்கிக்  கொள்கிறார். அங்கிருந்து வெளியேற மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. 

இந்தச் சவாலான, திகிலான சூழ்நிலையில் இருந்து அந்தப் பெண் எப்படி தன்னைப் பல ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொண்டு வெளியே வருகிறாள் என்பதுதான் கதையாம். 

“தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இப்படியொரு படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும். மேலும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் படைப்பாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்,” என்றார் அமலாபால்.

‘கிராமகா’ தற்காப்புக் கலையை முடிந்தவரை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், படத்தில் சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தருடன் ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளாராம். அந்தச் சண்டை ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படும் என்கிறார்.

“கதாசிரியர் அருண் இந்தக் கதையை விவரித்தபோதே அவர் எந்தளவு நேர்த்தியாகப் படமெடுப்பார் என்பதை உணர முடிந்தது. 

“இயக்குநர் வினோத், நிர்வாகத் தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் உள்ளிட்டோர் இந்தப் படம் வெளிவர பெரும் போராட்டங்களைச் சந்தித்துள்ளனர். அவர்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களுடன் ஒப்பிடுகையில் நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமேயில்லை,” என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார் அமலாபால்.

இந்தப் படக்குழுவில் உள்ள அனைவருமே பெண்களின் பலத்தை உணர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர், பெண் இனத்திற்கு மரியாதை அளிக்கும் இத்தகைய படைப்புகள் அதிகம் வெளிவர வேண்டும் என்றார்.

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜோன்ஸ் ‘மைனா’வில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். 

“மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. 

“படக்குழுவில் இருந்த அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்தனர். இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் மிகுந்த தைரியத்தைக் கொடுத்துள்ளது,” என்றார் அமலா.

கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க சம்மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு டூயட் பாடி நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் என்றார்.

இந்தச் சந்திப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் எஸ்.வி. சேகர், சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பாலின் தைரியத்தைப் பாராட்டுவதாகவும் இப்படிப்பட்ட படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

படத்தை தயாரிப்பதைவிட, உருவாக்குவதை விட, அதை உரிய நேரத்தில் வெளியிடுவதுதான் முக்கியம் என்றார் எஸ்.வி. சேகர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon