‘மாயநதி’ மேடையில் பேசப்பட்ட அரசியல்

அண்மைக் காலத்தில் திரைப்பட விழாக்களில் அரசியல் பேசுவது அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மேடையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் இயக்குநர் அமீர்.

அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’. அபி சரவணன், வெண்பா, ‘ஆடுகளம்’ நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில்தான் இயக்குநர் அமீர் காரசாரமாகப் பேசினார்.

தமிழகத்தை வெறும் வாக்காகவோ, கழிவுக் கிடங்காகவோ பார்க்க வேண்டாம் என மத்திய, மாநில ஆட்சியாளர்களை மறைமுகமாக எச்சரித்தார் அமீர்.

“ஊரில் உள்ள குப்பையை எல்லாம் கொண்டு வந்து கொட்டும் இடம் இதுவல்ல. தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. கொஞ்சமாவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள். சட்டமும் திட்டமும் மக்களுக்கானது. அதை முதலில் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளுங்கள்,” என்றார் அமீர்.

வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தவர்களுக்கே குடியுரிமை கிடையாது என்பது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.

‘மாயநதி’யில் நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகிய இருவருமே தாங்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர் எனப் படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.