மன அழுத்தம் என்பது சாதாரண பிரச்சினைதான்: விருது விழாவில் தீபிகா படுகோன்

மன அழுத்தம் என்பது சாதாரண பிரச்சினைதான்: விருது விழாவில் தீபிகா படுகோன்

1 mins read
d0e0fa0b-b54a-46c5-89ba-77d3864d3b15
மன அழுத்தம், பதற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பாராட்டி இந்தி நடிகை தீபிகா படுகோனுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. படம்: ஊடகம் -

உலகப் பொருளாதார அமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் கிறிஸ்டல் விருதை இந்த ஆண்டு பெற்றுள்ளார் இந்தி நடிகை தீபிகா படுகோன்.

மன அழுத்தம், பதற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது நிகழ்வில் பங்கேற்ற அவர், மனப்பதற்றம் என்பது எளிதில் குணமாகக்கூடிய ஒரு சாதாரண பிரச்சினைதான் என்றார்.

மேலும், இப்பிரச்சினையால் ஒவ்வொரு நொடியும் யாரேனும் ஒருவர் உலகின் ஏதோ ஒரு மூலையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் சோகச் சம்பவம் நடந்து வருவதாக கவலை தெரிவித்தார்.

இந்த நிலை மாறவேண்டுமெனில் அன்பும் மகிழ்ச்சியும் உலகம் முழுவதும் பரவவேண்டும் என தீபிகா வலியுறுத்தினார்.

"நானும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. உறவுகளும் பிரிவுகளும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன.

"மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம், 'நீங்கள் தனி மனிதர் அல்ல. உங்களுக்காக நிறைய பேர் உள்ளனர்' என்று சொல்லி தேற்றவேண்டும்," என்றார் தீபிகா படுகோன்.

மன அழுத்தம் காரணமாக உலகப் பொருளாதாரம் பெரும் இழப்புகளை, பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மனப்பதற்றம் குறைவதற்கான நடவடிக்கைகளில் ஒருவர் தயக்கமின்றி தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.