'கவர்ச்சிப்பாவை அல்ல'

'கவர்ச்சிப்பாவை அல்ல'

2 mins read
38e993da-1565-4dfd-96f9-1ef728da7a43
-

தமிழ்ப் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி உள்ளார். சொந்தமாக வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லை.

'பச்ச மாங்கா' மலையாளப் படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக சோனா நடித்துள்ளார். ஜெயேஷ் இயக்கிய இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில் தான் நடித்த விதம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை சோனா.

அவர் கூறுகையில், "பச்ச மாங்கா படம் ஒரு கனமான கதை யை அடிப்படையாகக் கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் முன்னோட்டக் காட்சியில் என் உடை மற்றும் சிறிதுநேர நடிப்பைப் பார்த்து கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை பலர் ஏற்படுத்தி வருகிறார்கள்.

"அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன்.

"இந்தப் படத்தின் மூலமாக என்னை கவர்ச்சி நடிகை என்று சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாபாத்திரமும் அப்படியே," என்று கூறியுள்ளார். ஷாஜஹான், குசேலன், கோ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் சோனா. கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் துடன் 'ஜானி' படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் வெளியாகவில்லை.

இந்தப் பச்ச மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார்.

'பச்ச மாங்கா' படம் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.