கடந்த பத்து ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 3 ஆயிரம் மாணவர்களின் கல்லூரிக் கனவை 'விதைத் திட்டம்' மூலமாக நிறைவேற்றி இருக்கிறோம் என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சூர்யா.
நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் இணைந்து நடத்தும் 'அகரம்' அறக்கட்டளையின் சேவை 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதையடுத்து, அகரம் பத்தாண்டுகள் 'தடம் விதைகளின் பயணம்' என்ற நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய சூர்யா, தொழில் நுட்பங்களும், தொடர்புகொள்ளும் வசதிகளும் விரல் நுனிக்கு வந்துவிட்ட காலம் இது என்றும், எனினும் பல மாணவர்களுக்கு நிறைய உதவி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
"தகவல் தொழில்நுட்பம், உலகின் அத்தனை தகவல்களையும் அள்ளித் தந்தாலும், வாய்ப்புகளும் வழிகாட்டுதல்களும் தேவைப்படும் கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்கள், தங்களின் கல்லூரிக் கல்விக்காக இன்றும் காத்திருக்கிறார்கள்," என்று சுட்டிக்காட்டும் போது அவர் முகத்தில் உண்மையான அக்கறையையும் கவலையையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
"அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அகரம் விதைத் திட்டம்," என்கிறார்.
"அகரம் அறக்கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலுவும் ஜெயஸ்ரீ அவர்களும் முக்கிய காரணம். அவர்களின் எண்ணங்களும், ஊக்குவிப்பும் மேலும் இரவு பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசூர உழைப்பினால்தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் நன்றி கூற இயலாது, அடையாளம் காண்பிக்க முடியும்.
"அகரம் ஒரு குடும்பம். பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல. இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம்," என்றார் சூர்யா.
மாணவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, கல்வி அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்தி, அவர்களின் குடும்பம், சொந்தப் பிரச்சினை
களைச் சமாளித்து, அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம் அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை என்று குறிப்பிட்ட அவர், அகரம் அறக்கட்டளையில் அனைத்து தம்பி தங்கைகளுடன் ஒரு சகபயணியாக பயணிப்பது மட்டுமன்றி தமது பங்களிப்பையும் அளிக்கப்போவதாக கூறினார்.
"மூன்று விஷயங்கள் என்றுமே நம்மை சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமூகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நாம் சமநிலையை பராமரிக்க வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தை செலவிடுங்கள். அகரம் அறக்கட்டளையின் வெற்றி என்பது அகரம் மாணவர்கள் கல்வி, வேலை ஆகியவற்றில் பெறும் வெற்றியே என்று நான் கூறுவேன். நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும்," என்றார் சூர்யா.

