ராதிகா: கர்ணனைக் கூட மிஞ்சிவிடுவார் சரத்குமார்

2 mins read
22469a96-3939-4a4d-8c36-120f0e08c660
கணவர் சரத்குமார் அருமையான மனிதர் என்றும், விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர் என்றும் பாராட்டுகிறார் நடிகை ராதிகா. படம்: ஊடகம் -

கணவர் சரத்குமார் அருமையான மனிதர் என்றும், விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர் என்றும் பாராட்டுகிறார் நடிகை ராதிகா.

மேலும் கர்ணனே வெட்கப்படும் அளவுக்கு சரத்குமார் தானம் செய்வார் என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

சரத்குமாரும் ராதிகாவும் தற்போது 'வானம் கொட்டட்டும்' படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடிக்கவேண்டும் என்று நினைத்ததில்லை என பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.

"என்னையும் சரத்குமாரையும் பொறுத்தவரை, செய்யும் செயலுக்கு நாங்கள் இருவரும் முக்கியத்துவம் கொடுப்போம். செய்கின்ற வேலையை விருப்பத்துடன் செய்கிறோம். ஆகையால்தான், பல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்த முடிகின்றன.

"இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என நினைத்ததில்லை. நாங்கள் இணைந்து நடிப்பதாகக் கூறிய பலர் கதை எதுவுமே பிடிக்கவில்லை. 'வானம் கொட்டட்டும்' கதையை தனா கூறியதுமே இருவருக்கும் பிடித்துவிட்டது. படப்பிடிப்பு நடத்திய விதமும், கதாபாத்திரங்கள் அமைந்த விதமும் மிக அழகாக இருந்தது. இந்தப் படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். நடிப்பில் இருவருக்கும் எப்பொழுதும் போட்டி இருந்தது கிடையாது," என்று ராதிகா கூறியுள்ளார்.

மாலை ஆறு மணிக்கு மேல் தாம் பணியாற்றுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றுவதில்லையாம்.

"மேலும் நான் செய்யும் வேலைக்கு முன்னுரிமை கொடுப்பேன். தினமும் யோகா செய்வேன். இருவருமே உணவில் கவனத்துடன் இருப்போம். இந்த ஒழுக்கம்தான் எங்களைச் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

"சரத்குமார் அருமையான மனிதர் மற்றும் அவருடைய விடா முயற்சி இரண்டும் அவரிடம் பிடித்த விஷயங்கள்.

"கர்ணனே வெட்கப்படும் அளவிற்கு தானம் செய்வதும், அதிலும் ஒருவருக்கு உண்மையாகவே உதவி தேவையா என்று ஆராயாமல் செய்வதும் அவரிடம் பிடிக்காதது," என்கிறார் ராதிகா.