தென்னிந்திய சின்னத்திரை, சினிமா பின்னணிக் குரல் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் பாடகி சின்மயி களமிறங்க உள்ளார். அச்சங்கத்தின் நடப்புத் தலைவரான நடிகர் ராதாரவியும் மீண்டும் தேர்தல் களம் காண்கிறார்.
இந்தச் சங்கத்தில் மொத்தம் 1600 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தின் நடப்பு நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் களம் இறங்குகிறார். அவரது தலைமையில் களம் இறங்கும் அணியை எதிர்த்து ராமராஜ்யம் என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது.
இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்குப் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக 'மீடூ' விவகாரம் தொடர்பில் சின்மயிக்கும் ராதிகாவுக்கும் இடையே மோதல் நிலவியது. இதனால் சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு பிறகு நீதிமன்ற தலையீட்டால் உறுப்பினராக நீடித்து வருகிறார்.

