இனி கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்காமல் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வேடங்களில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம் சோனா.
இவரது நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப் படமான 'பச்சமாங்கா' இப்போது வெளியாகிறது. இதில் சோனாவுக்கு முக்கியமான கதாபாத்திரமாம். பிரதாப் போத்தனும் நடித்துள்ளார்.
ஜெய்ஸ் இயக்கியுள்ள இப்படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில காட்சிகளில் சோனா கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இப்படம் கவர்ச்சியை நம்பி உருவாகவில்லை என்கிறார் சோனா.
''இந்தப் படம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது. அப்போதே இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன்.
"'பச்ச மாங்கா' படம் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிக்க சம்மதித்து இருப்பார்? என்பதை யோசிக்க வேண்டும்.
"இந்தப் படம் ஒரு கனமான கதையை அடிப்படையாகக் கொண்டது. பாலு மகேந்திரா சார் படம் போல மிக யதார்த்தமான ஒரு படைப்பு," என்று சோனா தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
முன்னோட்டக் காட்சித் தொகுப்பை மட்டுமே வைத்து கவர்ச்சிப் படம் என்று முத்திரை குத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் சோனா, படம் பார்த்த பிறகு உண்மை புரியும் என்கிறார்.
"கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். சில நொடிகள் வரக்கூடிய காட்சியை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் நான் கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பிவிட்டதாகச் சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
"இது மிகச் சிறந்த படம். என் கதாபாத்திரமும் அருமையானது. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்," என்கிறார் சோனா.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் சில படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வகையில் சில பிரச்சினைகளை சோனா எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
அதன் விளைவாக நெருக்கமான நண்பர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர்.
இந்நிலையில் சோனா புதிதாக இரண்டு படங்கள் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் சோனா தரப்பில் இதில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது.
சில படங்களிலாவது நடித்து முடித்த பிறகே அவர் படத் தயாரிப்பு போன்ற மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவாராம்.
அதே சமயம் புது இயக்குநர்களிடம் அவர் தொடர்ந்து கதைகள் கேட்டு வரு வதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

