சாதிப் பிரச்சினையால் பாதிக்கப்படும் நாயகன்

சாதிப் பிரச்சினையால் பாதிக்கப்படும் நாயகன்

1 mins read
c8354650-c889-4c19-b453-19780662873e
'புறநகர்' படத்தில் கமல்கோவின்ராஜ், சுகன்யா. படம்: ஊடகம் -

'ஜிம்னாஸ்டிக்ஸ்' வீரரான கமல் கோவின்ராஜ் நாயகனாக நடிக்கும் படம் 'புறநகர்'. இதை வள்ளியம்மாள் புரொடெக்‌ஷன் சார்பில் அவரே தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் என இரு நாயகிகள் உள்ளனர். மேலும் தேனி முருகன், கதிரவன், கண்ணன் ரகு, கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.

இலங்கைத் தமிழர்களின் துயரத்தைச் சொல்லும் 'எல்லாளன்' படத்தை இயக்கிய மின்னல் முருகன் அடுத்து இயக்கும் படம் இது. கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் அவரே எழுதி உள்ளார்.

சாதிக் கொடுமையால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அலசும் நல்ல படைப்பாக புறநகர் உருவாகி வருகிறது என்கிறார் மின்னல் முருகன்.

"சாதிக் கொடுமைதான் இந்த தேசத்தின் வியாதி. சாதிப் பிரச்சினையால் பாதிக்கப்படும் கதாநாயகன் சொந்த ஊரில் வாழ முடியாமல் தவிக்கிறார். இதை அடுத்து வேறு வழியின்றி புறநகர்ப் பகுதியில் குடியேறுகிறார்.

"ஆனால், சாதிப் பிரச்சினை அங்கும் அவரைத் துரத்துகிறது. எங்கு சென்றாலும் வாழ முடியாத சூழலில் தன் வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்ள அவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக விவரித்துள்ளோம்," என்கிறார் முருகன்.

சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் படத்தில் வணிக ரீதியான அம்சங்களும் நிறைந்திருக்குமாம். விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்ய, இந்திரஜித் இசையமைத்துள்ளார்.

ஒரு விளையாட்டு வீரருக்குள் வேறு திறமைகளும் குடிகொண்டு இருக்கும் என்பதை கமலைப் பார்த்து தாம் தெரிந்துகொண்டதாகவும் பாராட்டுகிறார் முருகன்.