'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் குறித்து சிறியதும் பெரியதுமாக அவ்வப்போது ஏதேனும் பிரச்சினை அல்லது சர்ச்சை எழுந்து வருகிறது. அந்த வகையில் இப்போது சர்ச்சை வளையத்தில் சிக்கி இருப்பவர் தர்ஷன்.
இவரும் நடிகை சனம் ஷெட்டியும் தீவிரமாக காதலிப்பதாக கடந்தாண்டு துவக்கத்திலேயே தகவல் வெளியானது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, கடைசியில் சர்ச்சைதான் வெடித்துள்ளது.
திருமணக் கனவில் இருந்த தம்மை தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக புகார் எழுப்பியுள்ளார் சனம் ஷெட்டி. இவர், 'கதம் கதம்', 'அம்புலி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தென்னிந்திய அழகிப் பட்டத்தையும் வென்றவர். இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தர்ஷன் குறித்து புகார் தெரிவித்துள்ளார் சனம்.
அதில், கடந்த 2017ஆம் ஆண்டில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தபோது தர்ஷன் என்கிற தியாகராஜனுடன் தமக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா கதாநாயகனாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி வந்த தர்ஷனுக்குப் பல வகையிலும் தாம் உதவியதாகவும் கூறியுள்ளார்.
"நாங்கள் இருவரும் 'மேகி' என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அன்பான காதலராக என்னைக் கவனித்துக்கொண்ட அவருடன் பல நாடுகளுக்குச் சென்று வந்தேன்.
"வாரத்தில் நான்கு நாட்கள் அவர் என் வீட்டில்தான் தங்குவார். அவரது செலவுகளை ஈடுகட்ட ரூபாய் 15 லட்சத்துக்கும் மேல் செலவிட்டுள்ளேன். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்காக நானே விண்ணப்பித்தேன். நானும் அதில் பங்கேற்க இருந்தேன்.
"இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது தன் பெற்றோருக்கு விஷயம் தெரியக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். கடந்தாண்டு மே மாதம் எங்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
"திருமணத்துக்கு நாள் குறித்த பிறகே 'பிக்பாஸ்' போட்டியில் பங்கேற்றார் தர்ஷன். அப்போது அவருக்கும் சக போட்டியாளரான ஒரு நடிகைக்கும் காதல் இருப்பதாக செய்தி வெளியானது. இதையடுத்து, போட்டி முடிந்து சந்திக்க முயன்றபோது அவர் முகம் கொடுக்கவில்லை. என்னைச் சந்திப்பதைத் தவிர்த்தார்.
"ஒருமுறை மலேசியாவுக்குச் சென்றபோது அதே விமானத்தில் பயணம் மேற்கொண்ட போதும் அவர் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நானே வலிய சென்று பேசியபோது இருவரும் உறவை முறித்துக்கொள்ளலாம் என்றார். என்னை விட்டு அவர் விலகுவதற்கு எந்தக் காரணமும் கூறவில்லை. இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை. தனது வளர்ச்சிக்காக அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்," என்று தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
இதுகுறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

