தர்ஷன்: காதலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்

தர்ஷன்: காதலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்

2 mins read
d9db2ade-7edd-4f02-8962-68a5123d7d8a
தன்னை தீவிரமாகக் காதலித்த 'பிக்பாஸ்' தர்ஷன் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகார் எழுப்பியுள்ள நிலையில், அவர் கூறுவது அனைத்தும் பொய் என்று தர்ஷன் கூறியுள்ளார். படம்: ஊடகம் -

தன்னை தீவிரமாகக் காதலித்த 'பிக்பாஸ்' தர்ஷன் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகார் எழுப்பியுள்ள நிலையில், அவர் கூறுவது அனைத்தும் பொய் என்று தர்ஷன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்

களிடம் பேசிய அவர், தனக்கும் சனம் ஷெட்டிக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்தத்தை வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று தாம் கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'பிக்பாஸ்' மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தர்ஷன். அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பே அவரும் சனம் ஷெட்டியும் காதலித்து வந்தனர். எனினும் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தர்ஷன் தம்மை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சனம் புலம்புகிறார். ஆனால் தர்ஷனோ, சனம்தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்.

"நான் சனம் ஷெட்டியின் பெற்றோரை மிரட்டியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.

"பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரினுடன் நான் பழகியது சனம் ஷெட்டிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் நட்பாகத்தான் பழகி வந்தோம்.

"ஒரு கட்டத்தில் எனக்கும் சனம் ஷெட்டிக்கும் உள்ள உறவு குறித்து ஷெரினிடம் தெரிவித்தேன். அதன் பிறகு அவர் விலகிவிட்டார். தம்மால் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

"பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு நான் மாறிவிட்டதாக சனம் சொல்கிறார். உண்மையில் அவரிடம்தான் நிறைய மாற்றங்கள் தென்பட்டன. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிக்க வேண்டும் என்றார். நான் வெளிநாடுகளுக்குச் சென்ற

போதெல்லாம் அவரும் உடன் வந்தார். விமானத்தில் பிசினஸ் வகுப்பில்தான் பயணம் செய்ய வேண்டும் என அடம் பிடிப்பார். நான் நடிக்கும் படத்தில் அவருக்கும் வாய்ப்பு தருமாறு வற்புறுத்துவார்.

"இப்படி அவரால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால்தான் 2 மாதங்களுக்குப் பிறகு பிரிவது என முடிவெடுத்தோம். அப்போதும் கூட பிரிவு குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். நான் வேறொரு நாட்டைச் சேர்ந்தவன் என்பதால், தமிழகத்தில் எனது வளர்ச்சியைத் தடுப்பதற்கு எல்லா வகையிலும் முயற்சிக்கப் போவதாகவும் கூட சொன்னார்.

"அவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பது புரியவில்லை. என்னைப் பழிவாங்கப் போவதாகவும் கூட கூறியுள்ளார்.

"அவரது இத்தகைய போக்கின் காரணமாகவே எங்களுக்குள் உள்ள உறவு குறித்து வெளிப்படையாக நான் ஏதும் அறிவிக்கவில்லை. சில தருணங்களில் பட நிறுவனங்களுக்கு நேரில் சென்று நான் அவரை ஏமாற்றிவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.

"அவர் எனக்காக சில சிபாரிசுகளை செய்தது உண்மை. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.

"அவரது பெற்றோர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். மற்றபடி அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை," என்று நீண்ட விளக்கமளிக்கிறார் தர்ஷன்.