நடிகைகளில் பெரும்பாலானோர் தற்போது இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். காரணம், நிறைவான சம்பளம், மனதுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்கள் அமைவது, படப்பிடிப்பு துரிதமாக நடந்தேறுவது, காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுவது எனப் பல சாதகமான அம்சங்களை நடிகைகள் பட்டியலிடுகின்றனர்.
நமது தமிழ் திரைக் கலைஞர்கள் அடுத்து எந்தப் படத்தில் அல்லது இணையத் தொடரில் பங்கேற்கப் போகிறார்கள் என்பது குறித்த தொகுப்பு இது.
நடிகை அமலா பால் அடுத்ததாக இணையத் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இத்தகவலை அவரே அறிவித்திருக்கிறார்.
இந்தித் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மகேஷ் பட் கைவண்ணத்தில் உருவாகும் இத்தொடரில் அமலா பாலுடன் இணைந்து தாஹிர் ராஜ் பசின், அம்ரிதா பூரி ஆகியோரும் நடிக்கின்றனர்.
கடந்த 1970களில் வட இந்தியாவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இத்தொடர் உருவாகிறது. அச்சமயம் காதல் வயப்பட்ட ஒரு ஜோடியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
"இத்தகைய முழுநீள காதல் கதையுள்ள தொடரில் நடிப்பதும், இதன் வழி இந்தி ரசிகர்களைச் சந்திப்பதும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்," என்கிறார் அமலா.
ஐஸ்வர்யா ராஜேஷைப் பொறுத்தவரையில் கைவசம் பல படங்கள் உள்ளன. இருப்பினும் தனிப்பட்ட விருப்பம் காரணமாக இணையத் தொடர்களிலும் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவான 'விக்ரம் வேதா'வுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, தமிழில் இணையத் தொடர் ஒன்றை இயக்க உள்ளனர்.
இதில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். நாயகனாக நடிக்க இருப்பது கதிர். மேலும், பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல். அமேசான் பிரைம் நிறுவனம் தயாரிக்கும் இந்த இணையத் தொடருக்கு 'சுழல்' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
நடிகை கங்கனா ரணாவத் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல். இது குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாக இரு மாதங்களாவது ஆகுமாம்.
தற்போது விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரணாவத். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் படம் இது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். ஜூன் 26ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ளார் கங்கனா. இது இணையத் தொடர் எனத் தகவல்.
ஒருவேளை எதிர்பார்ப்புக்கு ஏற்ப 'தலைவி' படம் வெற்றி பெற்றால், விஜய் மேலும் ஒரு பிரமுகரின் சுய சரிதையை திரைப்படமாக்குவாராம். அதிலும் கங்கனா நடிப்பார் எனத் தெரிகிறது.
அநேகமாக அது கண்ணகியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்றும், அதிலும் கங்கனா ரணாவத்தையே நாயகியாக நடிக்க வைக்க ஏ.எல்.விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரகுல் பிரீத் சிங்கை கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் இணையத் தொடரில் நடிக்கக் கேட்டு அணுகினாராம். ஆனால் தற்போது கால்ஷீட் ஒதுக்க இயலாது என ரகுல் தரப்பு கூறிவிட்டதாம்.
இத்தனைக்கும் அவர் சினிமாவில் வாங்கும் அதே தொகையை சம்பளமாக தருவதாகக் கூறியும் ரகுல் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, 'அட்டகத்தி' நந்திதா, ஸ்ரீதிவ்யா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் இணையத் தொடர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறுகின்றனராம்.

